எலும்புக் கூடுகளின் வயலாக சித்துபாத்தி மயானப் பகுதி ஜெனிவாவில் இது எதிரொலிக்கும்

எலும்புக்கூடுகளின் வயலாகவே அரியாலை சித்துபாத்தி இந்து மயானம் இருக்கிறது. ஆகவே சர்வதேச நிபுணர்களுடைய வருகை செம்மணி மனித புதைகுழிக்கு மிக மிக முக்கியம். அதற்கான முழு வேண்டுகோளையும் நாங்கள் எல்லா தரப்புகளுக்கும் வலியுறுத்துவோம். குறிப்பாக ஜெனிவா உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட அனைவருக்கும் கூட இதனை நாங்கள் கொண்டு செல்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழியை நேரடியாக வந்து பார்வையிட்டிருந்தேன். யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவானுடைய அனுமதியின் பிரகாரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக முதன்முதல் இந்த இடத்தை பார்வையிடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மிகப்பெரிய அவலம் நிறைந்த,மனதை நெருடுகின்ற சம்பவங்களாக அங்கு எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளை பார்க்க முடிந்தது. பதினொரு மீற்றர் அகலம் 12 மீற்றர் நீளம் கொண்ட ஒரு சதுர பரப்பளவுக்குள் மூன்றில் இரண்டு பகுதி ஆய்வு செய்யப்பட்ட பொழுது 115 எலும்பு கூடுகள் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் 105 தொகுதிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகள், நாலு வயது,3 வயதில் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மிக மோசமாக அடித்து நொருக்கப்பட்டு ஒரு சொட்டு துணி இல்லாமல் தாக்கப்பட்ட அந்த நிலை என்பது மிகக் கொடூரமானதாக இருக்கின்றது.
குறிப்பாக இந்துக்களுடைய முறையோ அல்லது கிறிஸ்தவருடைய முறையோ அடக்கம் செய்கிற பொழுது அவர்கள் திசை பார்த்து அதற்குரிய ஒரு அங்க வஸ்திரம் அல்லது பெட்டிகளோடு தான் அந்த உடல்களை அடக்கம் செய்வர். ஆனால் இங்கு நில மட்டத்திலிருந்து அரை அடி தூரத்தில் கூட புதைக்கப்பட்டிருக்கிறது.
1995ம் ஆண்டில் இருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் பூரணமாக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக இந்த இடம் இருந்திருக்கிறது. இந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் இருந்திருக்கிறது. வேறு யாரும் மனித உடலங்களை புதைக்க வாய்ப்பில்லை. திட்டமிடப்பட்ட வகையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினுடைய வடிவத்தை இந்த இடத்திலே பார்க்க முடிகிறது.
இந்த விசாரணை சாதாரணமாக உள்நாட்டில் உள்ள தொழில்நுட்ப வசதிகளையும் அல்லது ஆய்வுகளை வைத்து நிறுவப்படும் என்பதில் எங்களுக்கு சந்தேகமாக உண்டு. சர்வதேசரீதியான தரத்தில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வதேச நாடுகளுடைய பங்கு இருக்க வேண்டும். உலகத்திலே இருக்கின்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இவற்றுக்கான காலமும் எவ்வாறு மனித பேரவலம் நடைபெற்ற என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக இன்று எட்டு ஆண்டுகளாக தெருக்களிலே உண்ணாவிரதம் இருக்கின்ற போராடிக் கொண்டிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய கண்ணீர் 200க்கும் மேற்பட்டவர்கள் செய்த தியாகம், இதனை விட இந்த மண்ணிலே போராடிய மக்களுடைய தியாகத்தையும் நான் நினைக்கிறேன். இன்று இயற்கையாக எங்களுக்கு ஒரு வெளிப்பாட்டை தந்திருக்கிறது. இதனை நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உறுதியாக ஒரு நிலையை எடுக்க வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சர்வதேச அமைப்புகளுக்கும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் இந்த விடயத்தை கொண்டு செல்ல என்னுடைய முழு முயற்சிகளையும் கட்சியின் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
தமிழினத்துக்கு நடைபெற்ற முழுமையான ஒரு இன அழிப்பு இது. சர்வதேச தரத்தில் சர்வதேச ரீதியான ஒரு விசாரணையாக இது அமைய பெற்றால் மட்டும்தான் இதற்கான நீதி கிடைக்கும். இல்லையேல் இந்த சந்தர்ப்பமும் தமிழர்களிடமிருந்து மூடி மறைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
சர்வதேச நிபுணர்கள் இந்த இடத்துக்கு வர வேண்டும். அவர்கள் பார்க்கிற பொழுதுதான் அவர்களுக்கான அனுபவம் எவ்வாறு இது கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதற்கான காலம் என்ன? எந்த கால ஓட்டத்தில் இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கும் என்பதை அறியலாம். நாங்கள் எல்லோருமே இதற்கு கூட்டாக வலியுறுத்துகிறோம்.
இந்த சித்துப்பாத்தி மயானத்திலே கூடுதலாக தென்கிழக்கு மூலையாக இருக்கின்ற ஒரு பகுதியை நான் பார்வையிட்டேன். அதிலேயும் கூட பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பல்கலைக மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் கூட சில விடயங்களை குறிப்பிட்டனர். அந்த இடத்திலே சில பனை மரங்கள் நாட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அனேகமாக தமிழர்கள் பனை மரங்களை நாட்டுவது எல்லையில் தான் நடுவார்கள். அதிலும் சந்தேகம் உள்ளது. உடல்களை புதைத்து விட்டு அதற்கு மேல் பனை மரங்களை நட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது.
எலும்புக்கூடுகளின் வயலாகவே அரியாலை சித்துபாத்தி இந்து மயானம் இருக்கிறது. ஆகவே சர்வதேச நிபுணர்களுடைய வருகை மிக மிக முக்கியம். அதற்கான முழு வேண்டுகோளையும் நாங்கள் எல்லா தரப்புகளுக்கும் வலியுறுத்துவோம். குறிப்பாக ஜெனிவா உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட அனைவருக்கும் கூட இதனை நாங்கள் கொண்டு செல்வோம் – என்றார்.
![]()