இலங்கை

இந்தியாவை மிரட்டவா இலங்கைக்கு வரி குறைப்பு;  சந்தேகம் எழுப்பும் நாமல் எம்.பி.

இந்தியாவுக்கு ஏதேனும் செய்தியை சொல்வதற்காக தீர்வை வரி விடயத்தில் அமெரிக்கா இலங்கையை பயன்படுத்தியுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை மீதான அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி குறைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பரஸ்பர புதிய தீர்வை வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளமை நல்ல விடயமே. ஆனால் இது இலங்கைக்கு மட்டும் கிடைத்தது அல்ல. எங்களுடன் ஆடை உள்ளிட்ட உற்பத்தி துறையில் அமெரிக்க சந்தையில் போட்டியிடும் மற்றைய நாடுகளுக்கும் இதற்கு சமாந்திரமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கைக்கு விசேட நன்மை உள்ளது என்று குறிப்பிட முடியாது.

இதேவேளை இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலவேளை இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தக உடன்படிக்கையை செய்வது தொடர்பில் இந்தியாவுக்கு செய்தியை கூறுவதற்காக இலங்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கலாம். எனக்கு அவ்வாறுதான் தெரிகின்றது.

இந்த வலயத்தில் இந்தியாவை தவிர மற்றைய சகல நாடுகளிலும் வரிகளை குறைப்பதற்கும் எமது நாட்டை விடவும் இந்தியாவுக்கு அதிக வரிறை அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யா, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று கூறியுள்ளமையை பார்க்கும் போது தெளிவாக இந்தியாவுக்கு பாடமொன்றை கற்பிப்பதற்காக எங்களை பயன்படுத்தியிருப்பதாக கருதுகின்றோம்.

ஆனால் இதன் நன்மையை நாங்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். எனினும் அந்த நன்மையை பெற்றுக்கொள்ள முடியுமா இல்லையா என்பது எம்முடன் சந்தையில் போட்டியிடும் மற்றைய நாடுகளுக்கு குறைக்கப்பட்டுள்ள வரிகளே தீர்மானிக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *