செம்மணிக்கு அருகே கைதான 24 பேருக்கும் என்ன நடந்தது ?; ஆகஸ்ட் 28 இல் நீதிமன்றத் தீர்ப்பு

யாழ். நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பெண் உட்பட 24 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை,எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு யாழ்.குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் வந்த நிலையில் நாவற்குழி பகுதியில் ஜூலை 19 ஆம் திகதி இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு பின்னர் இந்த 24 பேரும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக நேற்று புதன்கிழமை திகதியிடப்பட்டது.
எனினும் நேற்றையதினம் நீதிவான் விடுமுறையில் இருந்ததால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இந்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.
நாவற்குழியானது செம்மணி பகுதியின் எல்லையில் உள்ள பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()