வட- கிழக்கில் வெறுமையாக இருக்கும் நிலங்கள் சிங்கள குடியேற்றங்களை உள் இழுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது

வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
1983 கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெலிக்கடையில் சிறையில் படுகொலைப்பட்டவர்களின் நினைவு நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983 யூலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நாள். அதற்கும் முன்னரும் இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டு ஒடுக்கப்பட வேண்டும் என சிந்தனையில்தான் ஆட்சியில் இருந்தார்கள் ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஜே ஆர் . ஜெயவர்தனாதான்.
அண்மையில் புகையிரதத்தில் ஒரு குழு சகோதாரத்துவ கோசத்தடன் வந்தனர். இதனை பார்த்த எனக்கு இப்பவும் நினைவில் இருக்கிறது அன்று புகையிரதத்தில் வந்த சிறில் மத்யூவின் காடையர்கள் குழு யாழ் நகரை அழித்தது. அன்று ஜே ஆர் சொன்னார் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை
மேற்கொண்டவர்கள் ஜேவிபியினர்தான் என்று. ஆகவே நான் நினைக்கின்றேன். அன்று இருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.
1983 இற்கு பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகவும், அதன் இராணுவத்திற்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரித்தது. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அங்குதான் அவர்களுக்கு பாதுகாப்பு என உணர்த்தியதும்1983 தான்.
வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் குறிப்பாக எதுவுமே அறியாத மலையக மக்கள் சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு நோக்கி வந்தார்கள். அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு என கருத்தினார்கள்.
இந்த நிலைமைகள் தான் வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக ஸ்ரீ போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது.
ஜனநாயக் போராட்டம் பின்னர் 30 வருட ஆயுத போராட்டம் அதற்கு பின்னராக இந்த15 வருட காலத்தில் நாம் பல அனுபவங்களை சந்தித்திருக்கின்றோம்.ஆனால் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னேற போகின்றோமாக என்றால் அது சந்தேகத்திற்குரியதே. தமிழ் அரசியலின் பலவீனம் இதுதான்.
தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது.
தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தரப்பினர்கள் உண்மையாகவே அதற்கு எதிராகவே செயற்பட்டிக்கொண்டிருக்கின்றனர்.எனவே நாம் ஆதாவது தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும். நாம் யாதார்த்திற்கு ஏற்ப எங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இன விடுதலைக்காக தங்களை இழந்த எங்களது மூத்த தலைவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும் எனத் தெரிவித்தார்.
![]()