இலங்கை

புதிய கல்விச் சீர்திருத்தம் அமுலானால் வடக்கே பல பாடசாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும்

புதிய கல்வி சீர்திருத்ததை பலாத்காரமாக நடைமுறைப்படுத்தி கொண்டு போக முடியாது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் அதற்காக குரல் கொடுப்போம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் கல்விச் சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை யாருடனும் பேசாமல் தற்போது அமுல்படுத்த முயல்கின்றனர்.இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களோடு வேறு வேறு மொழிகளில் செயல்படுபவர்களோடு கூட யாருடனும் பேசாமல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கொண்டு வந்துள்ள சீர்திருத்தத்தை பார்த்தால் தன்னிச்சையாக செய்த செயற்பாடாகவே பார்க்க முடியும்.கடந்த அரசாங்கம் கொண்டு வந்த முறையை தற்போது காபன் பிரதி செய்து இவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டபோது எல்லாம் தெரிந்த கல்வி அமைச்சர் நாங்கள் வேறு நிறத்திலும் அறிக்கை தருகிறோம் என அவர்களை நக்கல் அடிக்கிறார்.ஏன் இவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள் என தெரியவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாட வேளையை 40 நிமிடத்தில் இருந்து ஐம்பது நிமிடமாக மாற்றுகிறார்கள். இது சம்பந்தமாக மாணவர்கள் மத்தியில் ஆய்வு செய்து இதனை செய்தார்களா?மாணவர்களுக்கு இது தாங்க முடியுமா? அது எதுவும் இல்லாமல் இதை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்.

உபாலி சேகர என்பவரே இந்த சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். அவர் கோத்தபாய ஜனாதிபதியாக இருந்தபோது இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் தொழில்நுட்ப பாடம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தினார்கள். அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் புதிய சீர்திருத்தம் வருகிறது.

வட மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு பாரிய பற்றாக்குறை உள்ளது. கிளிநொச்சி, துணுக்காய் முல்லைத்தீவு, மடு போன்ற வலயங்களில் அதிபர் ஆசிரியர்களும் இல்லை. ஏன் அதிகாரிகளும் இல்லை. இந்த சீர்திருத்தத்தை அங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்?

கணித விஞ்ஞான பாடத்தை கற்பிக்க துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், புதிய பாடங்களுக்கு ஆசிரியர் எங்கு இருந்து கொண்டு வரப் போகிறார்கள்?

துணுக்காய் வலயத்தில் 75 பேர் இடம் மாறி போகிறார்கள்.அதற்காக 24 பேரே இடமாறி வந்துள்ளார்கள். புதிய பாடம் வந்தாலும் எவ்வாறு கற்பித்தலை செய்யப்போகிறார்கள்.அரசாங்கத்தின் திட்டம் சிறிய பாடசாலை மூடுவதாக உள்ளது.

ஆசிரியர்களுக்கான செலவு அதிகரிக்கும் என்பதற்காக சிறிய பாடசாலைகளை மூடுவதாகச் சொல்கிறார்கள். சிறிய பாடசாலைகள் மூடப்படும் போது அந்த பிள்ளைகளின் கல்விக்கு என்னவாக போகிறது?நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு மாணவருக்கும் படிப்பதற்கு உரிமை இருக்கிறது. அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். பெரிய பாடசாலைகள் மட்டும் இருக்க வேண்டும் சிறிய பாடசாலைகளை மூடச் சொல்கிறீர்களா?ஐம்பதிற்கு கீழுள்ள மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மூடினால் வடக்கில் உள்ள பாடசாலைகளே அதிகம் பாதிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் கல்வி சீர்திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்த எதிர்வரும் இரண்டாம் திகதி பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தலைமையில் பெரிய கூட்டம் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது வட மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம். பலாத்காரமாக கல்வியை கொண்டு போக முடியாது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் இதற்காக குரல் கொடுப்போம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *