கூட்டாக இனத்தை அழிக்கும் மனோநிலையில் இலங்கை அரசு; கஜேந்திரகுமார் எம்.பி. கடும் விசனம் ====

செம்மணி மனித புதைகுழி விசாரணையை சர்வதேச மட்டத்தில் செய்வதற்கும் அதை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை சனிக்கிழமை மதியம் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழியில் 90 எலும்புக்கூடுகளுக்கு மேலாக நிச்சயமாக கண்டுபிடிக்கப்படும் என்ற கருத்து நிபுணர்கள் மட்டத்திலிருந்த நிலையில் தற்போது(சனிக்கிழமை மதியம்)வரைக்கும் 89 எலும்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி என்பது 96 மற்றும் 97ஆம் ஆண்டுகளில் இருந்து மூடி மறைக்கப்பட்ட விடயம்.
அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம், அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்தி இது கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சோமரட்ண ராஜபக்ச எரிச்சலால், அரசாங்கத்தின் மீதான கோபத்தில் சொன்ன பொய் என்ற கோணத்தில் உலகையே நம்பவைத்ததுதான் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் காணப்படுகின்றது.
இறுதிப் போர் நிறைவுபெற்ற கடைசி காலத்தில் இனவழிப்பையும் கூட மறைத்து உள்ளக விசாரணை என்ற பெயரில் படிப்படியாக அதை குறைத்து ,உண்மையும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவோடு எந்தவிதமான குற்றவியல் விசாரணைகளையும் நடத்தாமல் மூடி மறைப்பதற்கு மாறிமாறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் செயற்பட்டது
போர் நடைபெற்ற கடைசி கால கட்டம் போதாது என பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன போதும் கூட அதை ஏற்காமல் முற்று முழுதாக மூடி மறைப்பதற்கு சர்வதேச சமூகம் சேர்ந்து செய்யப்பட்டது. இந்த சூழலில் செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
செம்மணி கண்டுபிடிப்பு இரண்டு விடயங்களுக்கு மிக முக்கியமானது. இன அழிப்புக்கு இது மிக முக்கியமான ஆதாரம். மற்றது ,கூட்டாக இனத்தை அழிக்கிற மனோநிலை இலங்கை அரசுக்கு தொடர்ந்து இருந்திருக்கிறது என்பதாகும்.
குறிப்பிட்ட சம்பவம் மட்டும் அல்ல தொடர்ச்சியாக காலங்காலமாக கூட்டாக இன அழிப்பு நடைபெற்று வருகின்றது என்பதற்கு செம்மணி, முல்லைத்தீவு,கொக்குத்தொடுவாய் , மன்னார் மற்றும் புதைகுழிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும் .
இவை எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றன என்றால் , கூட்டாக அழிக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் மனோ நிலையையே இவை வெளிப்படுத்தியுள்ளன.
சர்வதேசசமூகமானது இந்த விசாரணைகளை இறுதிப்போரின் இறுதிக் காலகட்டத்துடன் மட்டுப்படுத்த முயல்கின்ற நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமையானது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது,நீதியானது இல்லை என்பதை சொல்லிநிற்கின்றது,நிரூபித்திருக்கின்றது.
அனைத்து கோணங்களிலும் பார்க்கின்ற பொழுது,தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்குரிய ஆதாரங்களை தேடுகின்ற போராட்டத்தை நாங்கள் அவதானிக்கின்ற பொழுது செம்மணி மிகப் பெரிய திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும்.
முறைப்பாட்டாளரான கிருபாகரனுக்கு( சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாக சபைத் தலைவர்)நன்றி சொல்ல வேண்டும். அவர் இந்த விடயத்தை எங்களுக்கு சொன்னது மட்டுமல்ல அவர் அரியாலைப் பகுதியைச் சார்ந்தவர் என்று வகையில் அந்தக் காலப் பகுதியில் நடைபெற்ற விடயங்களையெல்லாம் கணிசமாக தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற வகையிலும், இது நிச்சயமாக செம்மணியின் அங்கம் என்ற விடயத்தை ஆணித்தரமாக சொன்ன இடத்தில் அந்த பொறுப்பை எடுத்து,தனக்கு பெரும் அச்சுறுத்தல் வரக்கூடிய நிலையிலும் பொலிஸிஸ் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
அதனுடைய இன்னொரு பரிணாமமாக,முழுமையான விசாரணையை சர்வதேச மட்டத்தில் செய்வதற்கும் அதை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரபடுத்த வேண்டும் என்றார்.
![]()