செம்மணி மயான நிர்வாகத்திடம் சி.ஐ.டி.யினர் தொடர் விசாரணை!; புதைகுழிகளிலிருந்து 46 சான்றுப் பொருட்கள் மீட்பு

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்குள்ள சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாக அங்கத்தவர்களிடம் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் புதைகுழியில் இருந்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 46 சான்றுப் பொருட்கள் அகழப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் கையளிக்கப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வுப் பணிகள் 22 ஆவது நாளாகவும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.
தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தலைமையிலான குழுவினர் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் முன்னிலையில் அகழ்வுப்பணி இடம்பெற்றது.
அகழ்வு பணிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளுடன் கடந்த இரண்டு தினங்களில் புதிதாக பதின்நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு மொத்தமாக 95 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தது எடுக்கப்பட்டுள்ளது.
11 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இரண்டு மனித புதைகுழிகளிலும் 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கான் பரிசோதனை சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்காததினால் எப்போது செய்யப்படும் என்பதை திங்கட்கிழமை(இன்று) அறிவிக்கக் கூடியதாக இருக்கும்.
அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 46 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாக அங்கத்தவர்களிடம் விசாரணைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
சில சில கட்டளைகளை பிறப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் அறிக்கைகள்ளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போதுதான் புலன்விசாரணை எவ்வாறு செல்கின்றது என்பது சம்பந்தமாக கூறக்கூடியதாக இருக்கும் – என்றனர்.
![]()