இலங்கை

மதுபோதையில் அடாவடி ! மாதா சுருவம் தகர்ப்பு: தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது!

யாழ்ப்பாணம், மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலில், பல மில்லியன் பெறுமதியான மாதா சுருவம் மதுபோதையில் இருந்த குழுவினரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறைப் பொலிஸார் தகவல் தெரிவிக்கையில், மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த சுமார் 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்துப் பொலிஸார் துரித நடவடிக்கையில் இறங்கி, 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் ஏனையோரும் தேடப்பட்டு வருவதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், விசாரணைகளை அடுத்துக் குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் (ஜூலை 25) குறித்த ஆலயப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகைதந்த பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கடும் மதுபோதையில் இருந்த குறித்த குழுவினர், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான மாதா சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கிறித்துவ ஆலயத்தின் சுருவம் இந்து சமயத்தைச் சேர்ந்த தரப்பினரால் உடைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பொலிஸார் நிலைமையைக் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *