இலங்கை

என்னை வீழ்த்துவதற்கு கட்சிக்குள் இருந்தே சதி; சி.ஐ.டி. விசாரணையை சந்திக்கத் தயார் – ஸ்ரீதரன் எம்.பி.

என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்கு பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் என் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கே வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மீது சொத்து குவிப்பு தொடர்பில் சஞ்சே மகாவத்த என்ற செயற்பாட்டாளர் கடந்த வியாழக்கிழமை நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருக்கிறார். இந்த முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே ஸ்ரீதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

‘எனக்கு முகம் தெரியாத சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் சொத்து குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார்.இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்ற என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது தான் தார்மீக கடமை. ஆகவே அந்தக் கடமையை நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவினர் சரியாக செய்ய வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

நான் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்து அரசியலுக்கு வந்தவன். தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக – தமிழ் தேசிய அரசியலுக்காக பயணிக்கின்ற ஒருவன். அந்த அடிப்படையில் என்மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ரீதியான வெறுப்புணர்வு காரணமாக எங்களுடன் இருக்கும் சிலரே இந்த அவதூறு முறைப்பாட்டுக்கு பின்னால் நின்று இயக்கியிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது என்னோடு சேர்ந்திருந்து,எனது கைகளை தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாக கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு -பின்னணியில் இருந்து கொண்டு எனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து இடைக்கால தடையை பெற்றிருந்தார்கள். அதேபோல், அண்மைக்காலமாக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொது வெளிகளில் எனக்கெதிராக அவதூறான கருத்துக்களை பேசிவருவதையும் நான் அவதானித்து வருகிறேன்.

அந்த அடிப்படையில் இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்களே இதன் பின்னணியில் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.எனவே, நிதி குற்ற புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்து குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தை சேர்ந்த சஞ்சே மகாவத்த என்பவருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது காலத்தின் கடமையாகும்.

என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன். இணையத் தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது.இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன்.அதனை எவரும் பார்க்கமுடியும்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவிக்கவேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நான் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக உறுதிப்படுத்தினால், அந்த சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கே வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். ஆகவே என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையை கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *