இலங்கை

செம்மணியைப் பார்த்துமா ஐ.நா.இந்த நிலைப்பாடு?; வட- கிழக்கு சமூக இயக்கம் விசனம் 

இனப்படுகொலை இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்கு கிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்தார்.

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரணவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம் வடக்கு கிழக்கில் 26ம் திகதி நடக்கிறது .கடிதங்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

வடக்கு கிழக்கில் உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கையில்லை என்பதை தெரிவித்தும் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தியும் 26ம் திகதி நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம்.

உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்.2016 ஜூலை மாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம்.

சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கச் சார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச் சபையில் பாரப்படுத்த வேண்டும்.

ஆகவேமேற்கூறப்பட்ட காரணங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம்.

வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாயிருக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *