இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியோர் அரசாங்கத்துக்குள் இருந்தாலும அவர்கள் மீதும் சட்டம் பாயும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருப்பார்களானால் அவர்களுக்கும் எதிராக சட்டம் பாயும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதுபிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஐக்கிய மக்கள் சக்திஎம்.பி. சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிகயாக முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் பேசுகையில்,

மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர 2024ஆம் ஆண்டிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றது. இந்த தாக்குதல் தொடர்பில் 2019ஆம் ஆண்டிலிருந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அப்போது விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமிருந்தது. ஆனால் செய்யவில்லை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினை.

ஆனால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம் . யாரும் குழப்பமடையத் தேவையில்லை. எமது பிரதி பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம்.அதில் மறைப்பதற்கு எங்களுக்கு எதுவும் கிடையாது.. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருபார்களானால் அவர்களுக்கும் எதிராக சட்டம் பாயும் என்றார்.

அதேநேரம் சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பாக அமைவதால் அந்த விபரங்களை தற்போது வெளியிட முடியாது. எனினும் யாருக்கு வேண்டுமானாலும் அறிக்கையை ஆராய்ந்து பார்க்க முடியும்.

அத்துடன் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்துக்கு கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *