இந்தியா

சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களுக்குள் புதிய கடவுச்சீட்டை வழங்குமாறு கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமானின் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது மனுவில், வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது தனது கடவுச்சீட்டைக் காணவில்லை என்றும், பல முயற்சிகளுக்குப் பிறகும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சீமான் குறிப்பிட்டிருந்தார். புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளதைக் காரணம் காட்டி, மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்த நிராகரிப்பு உத்தரவை ரத்துசெய்து, புதிய கடவுச்சீட்டு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு சீமான் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். விசாரணையின்போது, சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர், சீமான் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், புதிய கடவுச்சீட்டு வழங்குவதை மறுப்பதற்கு அவை காரணமாக அமையக்கூடாது என்றும் வாதிட்டார்.

மனு மற்றும் வாதங்களை கவனமாகப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீமானின் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் அவருக்கு புதிய கடவுச்சீட்டை வழங்குமாறு மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *