தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக் கூறலை முற்றாக முடக்க அரசு யுக்தி; பொது நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் வர அழைப்பு

ஐ.நா.வுக்குள்ளே இருக்கின்ற பலவீனத்தை பயன்படுத்தி அரசாங்கம் கெட்டித்தனமாக தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக் கூறல் என்ற கோரிக்கையை முற்றுமுழுதாக முடக்குவதற்கு ஒரு யுக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதெனக் குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல் தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் வரவேண்டும் என்றார்.
தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,சிவில் அமைப்புகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவர், செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த மற்ற அனைத்து கட்சிகளினுடைய பிரதிநிதிகளும் அதே போன்று மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
இதுவரை காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பொறுப்புக் கூறல் விடயம் சர்வதேச அரங்கிலே ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலே விலக்கப்பட்டு இருக்கிறது. தீர்மானங்கள் காலதாமதமாக நிறைவேற்றப்பட்டு எந்த விதத்திலும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் பாதிக்கப்பட்ட மக்கள் கணிசமாக ஏமாற்றப்பட்டு பொறுப்பு கூறலுக்கான வாய்ப்புகளும் அதற்குரிய சாட்சியங்களும் இழந்து போகின்ற நிலைமை தொடர்ச்சியாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல் விடயம் முற்றும் முழுதாக முடிவுக்கு வருகின்ற அபாயம் ஏற்படுகின்ற அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தியுடைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகள் சபை அலுவலகமே அரசின் அங்கமாகவும் அரசுக்கு அங்கீகாரத்தை தேடி கொடுக்கின்ற ஒரு வடிவத்திலேயே செயல்படுகின்ற அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கிறது என்பதே வடக்கு கிழக்கிலே பாதிக்கப்பட்ட அமைப்புகள், மக்களுடைய கருத்தாக இருக்கிறது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அதேபோன்று மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கும் விசேடமாக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்.
ஆனால் அரசாங்கமோ கெட்டித்தனமாக, ஐ.நா.வுக்குள்ளே இருக்கின்ற பலவீனத்தை பயன்படுத்தி தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்பு கூறல் என்ற கோரிக்கையை முற்றுமுழுதாக முடக்குவதற்கு ஒரு யுக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பதிலாக அரசாங்கம் புதிய சுயாதீன பொதுக் கட்டமைப்பொன்றை உருவாக்கி அதன் ஊடாக அனைத்து விடயங்களையும் நேர்மையாக கடைப்பிடிக்கலாம் என்ற போலியான நம்பிக்கையை ஐ.நா.ஊடாகவே கட்டி எழுப்புவதற்கு மிகத் தீவிரமாக செயற்படுகிறது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய செம்மணி தொடர்பான கடிதமும் அமைந்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து, குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் இணைத்து பொது நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இதில் கலந்து கொள்ளவில்லை என கட்சி தீர்மானித்ததாக எமக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. புதிய கோரிக்கை கடிதம் ஒன்றை நாங்கள் தயாரிக்க வேண்டும். விசேடமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய, அனைத்து மனித உரிமை சார்ந்த அமைப்புகளுடைய, அனைத்து சிவில் சமூக அமைப்புகளுடைய கையொப்பங்களோடு வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலக்கோரிக்கைகளை மீள வலியுறுத்தி இன்றைய காலகட்டத்தில் உள்ள மேலதிக விடயங்களையும் உள்ளடக்கி கடிதம் ஒன்றை எழுதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனை விரைவாக வெளிக்கொண்டு வருவதற்கும் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். உள்ளடக்கம் தொடர்பாக கொள்கையளவில் ஏகமனதாக அனைத்து தரப்புக்களும் இணங்கி இருக்கிறார்கள்.
அந்தக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களுடைய உண்மையான கோரிக்கை இவைதான் என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தக் கோரிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் அணி திரட்டல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்
அந்தக் கோரிக்கை கடிதம் வெளிவந்த பிற்பாடு அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் வெளிவந்ததற்கு பிற்பாடு இந்தக் கடிதத்தினுடைய உள்ளடக்கங்களை படித்ததற்கு பின்பு , இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத தரப்புகள் அதில் சம்பந்தப்பட விரும்பும் பட்சத்தில் அவர்களை உள்வாங்கி இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.
இதுவரை அழைப்பு விடுக்கப்படாத தரப்புகளுக்கும், அழைப்பு விடுத்தும் வராத தரப்புகளுக்கும் இதுவொரு சந்தர்ப்பமாகும் – என்றார்.
![]()