இலங்கை

யாழ் மூளாயில் இரு குழுக்களிடையே கடும் மோதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு! இருவர் கைது!!

யாழ். மூளாய் மாவடி வீதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (19.07.2025) மூளாய்ப் பகுதியில் இரு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட தர்க்கம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் வரை சென்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பிரச்சினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2025) மீண்டும் தலைதூக்கிய நிலையில் இரு குழுக்களின் பிரச்சினையாக உருவெடுத்து இரு குழுவினரின் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் மேற்படி பகுதி வீதியால் செல்பவர்கள் மீதும் நேற்றுக் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளொன்றும் முற்றாகத் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடம் மற்றொரு மோட்டார்ச் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய விரைந்து சென்ற பொலிஸார் மோதல் நிலையைக் கட்டுப்படுத்த முயன்ற போது ஒரு குழுவினர் பொலிஸார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் நேற்று மாலை வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தலைமைறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *