இலங்கை

திருடர்களை திருடர்கள் விடுவிக்கும் நிலைமை; தயாசிறி எம்.பி. தெரிவிப்பு 

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தில் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அத்துடன் திருடர்களை திருடர்கள் விடுவிக்கும் நிலைமையே தற்போது நாட்டில் உள்ளதென என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. பிரதான எரிபொருள் விநியோகத்தின் முறையற்ற செயற்பாட்டினால் எரிபொருள் விநியோகத்தில் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது.இந்த முறைகேடு தொடர்பில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டது.இந்த விசாரணைக்காக 86 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த முறைகேட்டுடன் தொடர்புபட்டவர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் தற்போதும் பதவிகளில் உள்ளனர் . இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தில் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் .

திருடர்களை திருடர்கள் விடுவிக்கும் நிலைமையே தற்போது நாட்டில் உள்ளது .குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்களே தவிர அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படுவதில்லை.

கத்தோலிக்க பேராயரின் வலியுறுத்தலுக்கு அமைவாக சானி அபேசேகரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். . எனவே இந்த முறைகேடு தொடர்பில் சானி அபேசேகர நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *