முன் பிணை கோரிக்கை நிராகரிப்பு: எவ்வேளையிலும் ராஜித கைதாகலாம்?

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவான் தான் கைது செய்யப்படவுள்ளதாகவும், அவ்வாறு கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணை வழங்கி தன்னை விடுவிக்குமாறும் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தாக்கல் செய்திருந்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராஜித சேனாரட்னவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. இதன்போது ராஜித சேனாரட்ன தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த இருதரப்பு விளக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
முன் பிணை வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே அந்த மனுவை தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தொலைபேசி எண்ணை துண்டித்துவிட்டு, தனது வீட்டை விட்டும் வெளியேறி, பலமுறை அனுப்பிய அழைப்பாணைகளை புறக்கணித்துள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜித சேனாரட்ன கடற்றொழில் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 26.2 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கில் அவரை கைது செய்வதற்கு கடந்த வாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வாறான நிலைமையில் தலைமறைவாக இருந்த ராஜித சேனாரட்ன, தனது சட்டத்தரணிகள் ஊடாக முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()