அரசாங்கத்தை தாக்கும் ‘கர்மவினை’; சம்பிக்க தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தை கர்மவினை தாக்கி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசாங்கமாக அந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயற்படுத்த முனைகின்றனர் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன.இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டாண்டுகால பதவியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நவீன தொழில் உலகினை கருத்திற் கொண்டு கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் குழுவை நியமித்து மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதைய கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தை தோற்றுவித்தார்கள்.இதனால் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட கல்வி மறுசீரமைப்பு பணிகளை இந்த அரசாங்கம் எவ்வித மாற்றமுமில்லாமல் செயற்படுத்த தீர்மானித்துள்ளது.இதுதான் கர்மவினை.
புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
பாடத் தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என்றார்.
![]()