இலங்கை

அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள்; ஊழல், மோசடி விசாரணை வளையத்திற்குள் சஜித்

ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை வளையத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி காலத்தில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக சஜித் பிரேமதாச பணியாற்றிய காலத்தில் மத்திய கலாசார நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக கூறப்படுவது தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2017 தொடக்கம் 2020 வரைக்குமான காலப்பகுதியில் மத்திய கலாச்சார நிதியத்தில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி ஜீ.எம்.டபிள்யு. பிரதீப் ஜயதிலக்க தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி தற்போது குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், கூடிய விரைவில் சஜித் பிரேமதாசவிடம் அந்தக் குழுவினர் முன்னிலையில் அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஆரம்பமாகியுள்ள விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தள்ள சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, நிச்சயமாக சட்டம் செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தவர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்படி ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவரும் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்துள்ளதாகவும் இதனால் விசாரணைகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *