குறள் கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 7…. சங்கர சுப்பிரமணியன்


மனிதர்களை மனிதர்கள் வெறுப்பதற்கும் விரும்புவதற்கும் பல காரணங்கள் உண்டு அதேபோல் ஒரு நாட்டை ஒரு நாடு வெறுப்பதற்கும் விரும்புவதற்கும் பல காரணங்கள் உண்டு. சான்றாக இந்தியா பாகிஸ்தானை வெறுப்பதற்கும் இலங்கையை விரும்புவதற்கும் பல காரணங்கள் உண்டு. இது அடிப்படையில் சரியல்ல என்றாலும் ஒரு நாட்டினரை ஒரு நாட்டினர் வெறுக்கவும் விரும்பவும் தொடங்கியுள்ளார்கள்.
இந்த வெறுப்புக்கு காரணம் இரு நாடுகளுக்கு நடுவே இருக்கும் அரசியல். இந்த அரசியலை நிகழ்த்துபவர்கள் அரசியல் வாதிகள். இவர்களின் அரசியலில் அகப்பட்டு வெறுப்பை காரணமின்றி ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டினர் மீது காண்பிப்பதை அப்பாவித்தனம் என்றே கூறலாம். இம்மக்கள் எய்தவனிருக்க அம்பை நோவபவர்கள்.
சில சமயங்களில் பண்பாடு, இனம் மற்றும் மதங்களால் வேறுபடும் மக்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பது கூட சரியில்லை என்றாலும் கண்மூடித்தனமான நாட்டுப்பற்று என்று கூறலாம். ஆனால் ஒரு நாட்டில் வாழும் மக்கள் இன்னொரு நாட்டில் வாழும் தன் இன மக்களையே வெறுப்பதை என்னவென்பது?
எனக்கு இத்தகைய மக்களைப் பார்க்கும்போது வெறுப்பு என்று சொல்வதை விட ஒரு வித பரிதாபமே தோன்றுகிறது என்பேன். உலக மக்களுக்கு கருத்துரிமை உண்டு. அதுவே அவர்களுக்கு எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையும் கொடுத்துள்ளது. ஒருவர் தன் கருத்தை சொல்லும்போது ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் கருத்தைச் சொல்லவே கூடாது என்பது முறையல்ல.
இந்த சூழலில் நான் ஒரு திருக்குறளை எடுத்தியம்ப விரும்புகிறேன். புறங்கூறாமை எனும் அதிகாரத்தில வரும் கடைசிக் குறளைப் பார்ப்போம்.
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”
இந்தக் குறளுக்கு எல்லோரும் பொதுவாக காணும் பொருளானது மற்றவர்களிடம் குறை காண்பவர்கள் அதைப்போன்று தன்னிடமுள்ள குறைகளையும் பார்த்தார்களானால் உலகில் எவ்வித தீமையும் ஏற்படாது என்பதாகும்.
இந்த குறளுக்கு என்பார்வையில் குற்றம் என்பது மட்டுமல்ல ஒரு கருத்தை சொல்வதிலும் இந்த அறத்தை கடைப் பிடித்தால் நல்லதாக இருக்கும் என்பதாகும். உலகில் வாழும் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு. இந்த கருத்தின் வெளிப்பாடுதான் பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படுகிறது.
உலகில் சிலநாடுகளுக்கிடையே பனிப்போர் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும் அந்த நாடுகள் மற்ற நாடுகளின் அரசியல் நிகழ்வுகளைப்பற்றி பேசவே செய்வார்கள். ஊர் வாயை மூட முடியுமா? எந்த பழமொழியே இதற்கு சான்றாக இருக்கிறது.
இது இப்படியிருக்க ஒரு இனமக்கள் இரு வேறு நாடுகளில் வாழும்போது அவர்கள் இனப்பற்றின் காரணமாகவோ அல்லது
அரசியல் நிலைப்பாடுகளை கவனிக்கும்போது ஏற்படும் உந்துதலால் தத்தம் கருத்தைப் பற்றி எழுதவோ பேசவோ செய்வார்கள். நமக்கு ஏதோ ஒரு காரணத்தினால் வேறு நாட்டில் வாழும் நம் இன மக்களை பிடிக்காமல் போகலாம்.
அந்த ஒரு காரணத்தினால் வேறு நாட்டில் வாழும் நம்மின மக்கள் நம்மைப் பற்றி பேசவே கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை எவ்வித நியாயமும் இல்லை என்பேன். அதிலும் சில அன்பர்களின் கருத்தை அறியும்போது நம்மினம் எப்படி எல்லாம் பிளவுபட்டு கிடைக்கிறது என்பதை எண்ண என் மனம் வேதனை அடையும்.
அதிலும் சிலர் எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டிய
அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகவே இருக்கட்டும. உங்களுக்கு எவரும் பாடம் எடுக்கவில்லை. உங்களுக்காக எதுவும் எவரும் சொல்வதில்லை. மாறாக அவர்களின் கருத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள் என்று ஏன் எண்ண மறுக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக அரசியல் பேசினால் கோபமடைகிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவது போல் அல்லவா இது தெரிகிறது. அரசியல்வாதிகள் தம் பிழைப்பை ஓட்டுவதற்காக செய்யும் சித்து வேலைகளில் சிக்குண்டு வேறு நாட்டில் வாழும் தம் இனமக்களை ஒட்டு மொத்தமாக வெறுப்பதில் என்ன நியாயம் உள்ளது.
சரி, அந்த அன்பர்களின் கூற்றை அப்படியே ஏற்போம். அப்படி ஏற்க வேண்டுமானால் இவர்களும் வேறுநாட்டில் வாழும் ஒட்டு மொத்த இனத்தைப் பற்றியோ அந்த நாட்டின் அரசியலைப் பற்றியோ பேசக்கூடாது அல்லவா? அதுதானே நியாயம்.
அப்படி இல்லாவிடில் ஊருக்குத்தான் நியாயம் என் பாவாய். உனக்கும் எனக்கும் இல்லையடி என் பாவாய் என்றாகிவிடாதா? இன்னும் விளக்கமாக வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானால் எனக்கு வந்தால் ரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி என்றாகி விடாதா? நான் சொல்வதில் தவறேதும் இல்லை என எண்ணுகிறேன்.
ஆதலால் என்பார்வையில் இது குற்றத்துக்கு மட்டும் சொல்லப்பட்டதாகத் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு கருத்தையோ அல்லது அதைப்பற்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் கூட அதில் தன்னையும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதாகும்.
இறுதியாக மற்றவர் நமக்கு ஒன்னறைச் செய்வது பிடிக்கவில்லை அல்லது அதில் உடன்பாடில்லை என்கிறபோது நாமும் அதை மற்றவர்களுக்கு செய்யக்கூடாதல்லவா?
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகள் சிலவற்றுடன் இக் கட்டுரையை முடிக்கிறேன்.
“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி”
இந்த வரிகளை தவறென்று சொல்பவர்கள் அவர்கள் முதலில் இதைப்போல் கவிதைகளை எழுதக்கூடாது. தான் ஒன்றைச் செய்யும்போது அதையே பிறர் செய்தால் தவறென்று சொல்வது அறமற்றதாகும்.
![]()