இலங்கை

இலங்கையில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு வழங்குவேன்- பாடகர் ஸ்ரீனிவாஸ் !

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்இன்றைய தினம் (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாடகர் ஸ்ரீனிவாஸ் , நேற்றையதினம் மருத்துவ பீடத்தில் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் , யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் மகிழ்ச்சி எனவும் உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று நடைபெறவுள்ள இசை நிகழ்வு மருத்துவ பீட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுக்கு சென்று வருவதற்கு பேருந்து வாங்க நிதி திரட்டவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இசை நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில், நடைபெறும் எனவும் தன்னுடன் தனது மகள், பாடகர்கள் அக்சயா , ஜீவன் மற்றும் கில்மிஷா ஆகியோரும் பாடல்களை பாடி மகிழ்விக்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு, மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் தான் ஊதியம் பெறவில்லை எனவும் கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் எனவும் குறித்த நிகழ்வுக்கு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *