இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் அரசுக்குள் முரண்பாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன.இதனால்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசங்கம் அரசாங்கத்தையே விசாரிக்க வேண்டி இருப்பது சவாலான விடயம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பெறுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கோத்தபாய ராஜபக்ஸ பயன்படுத்தியதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அநுர அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அப்பாவி மக்களின் உயிர்களை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மறைக்க முற்படும் எவருக்கும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழவோ,அதிகாரத்தில் இருப்பதற்கோ அதிர்ஷ்டம் கிடைக்காது. அநுர அரசாங்கத்துக்கும் அதனையே கூறுகின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்தால், அதற்கான தீர்ப்பை இயற்கை வழங்கும்.

அநுர அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் துளியளவேனும் திருப்தியடைய முடியாது. ஏனெனில் இவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மிகவும் கீழ்த்தரமாகவே பயன்படுத்தினர் .

அதிகாரத்திற்கான கோத்தபாய ராஜபக்ஸ இந்த தாக்குதல் சம்பவத்தை மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தினார். இதனால் அவருக்கு தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியவில்லை. அதேபோன்று இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கோத்தபாய ராஜபக்ஸ பயன்படுத்தியதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அநுர அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பை விடுப்பதாக தெரிவித்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுடனே அரசாங்கம் விளையாடி வருகிறது. அரசாங்கத்தின் இந்த விளையாட்டு வினையாகுவதற்கு நீண்டம் காலம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே விசாரிக்க வேண்டி இருப்பது சவாலான விடயம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரமுடைய நாட்டின் தலைவரே இவ்வாறு தெரிவித்தால் அதற்குமேல் இதுதொடர்பில் எதுவும் இடம்பெறாது என்பதே அர்த்தம். இந்த தாக்குதல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே முரண்பாடான கருத்துக்கள் எழுகின்றன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *