இலங்கை

ட்ரம்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தேநீர் அருந்தி வரியை குறைத்திருப்பார்கள் போல்;  பிமல் ரத்நாயக்க கிண்டல் 

தாங்கள் ஆட்சியில் இருந்தால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தேநீர் அருந்திக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வை வரியை குறைத்திருப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவாறு எதிர்க்கட்சியினர் பேசுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த போதே சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து வினைத்திறனாக செயற்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே 30 சதவீதமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாராட்டாவிடினும், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் இருக்க வேண்டும்.

பூகோள காரணிகள் அனைத்தையும் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.பிரிட்டன் இலங்கைக்கு விசேட வரிச்சலுகையை வழங்கியுள்ளது. பூகோள காரணிகள் மாற்றமடையக் கூடியது என்பதை எதிர்க்கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஆட்சியில் இருந்தால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தேநீர் அருந்திக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வை வரியை குறைத்திருப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். பூகோள நெருக்கடிகளையும் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்துவது கீழ்த்தரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *