இலங்கை

புதைகுழியிலிருந்து 65 எலும்புக் கூடுகளும் முற்றாக அகழ்ந்தெடுப்பு;  21 ஆம் திகதி மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு 65 எலும்புக்கூடுகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன், இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தற்காலிகமாக இன்றுடன்(நேற்று) முடிவுக்கு வருவதாகவும்,அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதினைந்தாம் நாள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றையதினம்(நேற்று) யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தலைமையிலான வைத்தியர்கள் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்

அடங்கலாக அகழ்வுப் பணி நடைபெற்றது.

மொத்தமாக ஆரம்ப கட்டத்தில் ஒன்பது நாட்களும் இன்று(நேற்று) வரையான 15 நாட்களும் சேர்த்து 24 நாட்கள் இங்கு மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனிதப் புதைகுழியில் இருந்து 63 எலும்புக் கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்புக் கூடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மொத்தமாக 65 மண்டையோட்டுடன் கூடிய எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.தடயப் பொருட்களும் நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக இன்றுடன்(நேற்று)முடிவுக்கு வருகிறது. அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *