பெரும் குற்றம் நடந்த பிரதேசமாக செம்மணி!; சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் காணப்படுவதால் மிகப் பெரிய சர்ச்சை என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்

செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் காணப்படுகிறது. இது மிகப் பெரிய சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. சிறுவர்கள் எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருதப்பட முடியாது. நிச்சயமாக பெரும் குற்றம் நடந்த இடமாகவே இது காணப்படுகிறது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பன்னிரண்டாம் நாளான நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் அகழ்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், எலும்பு கூடுகள் அனைத்தும் குறைந்தளவு ஆழத்தில் அதாவது ஒன்றரையடி இரண்டடிக்குள்ளான இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரணமாக புதைக்கப்படும் விதமாக தெரியவில்லை. மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாகத் தெரியவில்லை. மாறாக ஏனோதானோ என அவசரத்தில் செய்யப்பட்ட விடயமாகவே தெரிகிறது.
சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் காணப்படுகிறது. இது மிகப் பெரிய சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
சிறுவர்கள் எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருதப்பட முடியாது. நிச்சயமாக பெரும் குற்றம் நடந்த இடமாகவே இது காணப்படுகிறது.
இந்த விடயத்தில் மிகவும் கவனமாக ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் கண்டெடுக்கப்படுகின்ற விடயங்கள் பற்றி உத்தியோகபூர்வமாக இங்கு அறிவிக்கப்படுகிறது. அத்துடன் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு ஆராய்வுப் பணிகள் நடக்கிறது.
எனவே இது எல்லாம் மிக நுட்பமாக உத்தியோகபூர்வமாக நன்றாக நடக்கிறது என்று தான் நாங்கள் கூற வேண்டும். இன்று(நேற்று) பன்னிரண்டாவது நாள். இன்னும் பல நாட்கள் இந்த விடயம் நடைபெற இருக்கிறது. இதற்கு சகலருடைய ஒத்துழைப்பும் தேவை. யாழ் நீதவான் இதற்கு பொறுப்பாக இருக்கிறார். இந்த அகழ்வு நாளையும்(இன்று) தொடர்ந்து நடக்கும் – என்றார்.
![]()