புலிகளிருந்த காலத்தை விட இப்போது நிலைமை மோசம்; மொட்டின் செயலாளர் சாகர காரியவசம்=====

விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தை விடவும் ஆபத்தான நிலைக்கு தற்போது நாடு போய் கொண்டிருக்கின்றது என்றும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை பாஸிச ஆட்சிக்கான ஆரம்பக்கட்டமா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தேசிய பாதுகாப்பானது எல்ரிரிஈ பயங்கரவாதம் இந்த நாட்டில் செயற்பட்ட காலத்தில் இருந்ததை விடவும் தற்போது ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. 1988/89 ஜே.வி.பியின் கலவரக் காலத்தில் இருந்ததை போன்ற நிலைக்கு நாடு பயணிக்கின்றது என்று தெரிகின்றது. நீதிமன்றத்திற்கு உள்ளேயே சென்று கொலைகளை செய்கின்றனர். பொலிஸ் நிலையம், வீடுகளுக்கு சென்றும் கொலைகளை செய்கின்றனர். கொலை சம்பவங்களை நியாயமானதாக காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் குற்றக்கும்பல்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை போன்று காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆனால் நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்தவே மக்கள் அரசாங்கத்தை அமைக்கின்றனர். ஆனால் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் வியாபாரி, பாதாள குழுவை சேர்ந்தவர் பார்க்க முடியாது. சட்டத்தை மீறி எவருக்கும் தண்டனை வழங்க முடியாது. 323 கொள்கலன் ஊழல் தொடர்பில் முதலில் வெளிப்படுத்தி டேன் பிரியசாத் கொல்லபட்டார். அந்த கொலை மூடி மறைக்கப்பட்டது.
இந்த அரசாங்கம் பாஸிச வாத ஆட்சியை கொண்டு செல்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையா என்ற சந்தேகங்கள் உள்ளன. பாஸிச வாத ஆட்சியில் தமது எதிரிகளை கட்டுப்படுத்த முடியாத போது இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொன்று இவ்வாறாக செய்கின்றனரான என்றும் கேட்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமைகள் யுத்தத்தின் பின்னர் காணாதவையாக உள்ளன.
நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக கூறும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடமே. எமது அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
![]()