30 வருடங்களாக சிறையிலிருக்கும் சகோதரனை விடுவிக்க கோரிய போதும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை

நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது சகோதரனை விடுவிக்க கோரிய பெண்ணொருவர் , தாங்கள் பல கோரிக்கைகளை முன் வைத்தபோதும் உரிய தரப்புக்களைச் சேர்ந்த ஒருவர் கூட ஒரு பதிலையும் தரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதியாக இருக்கும் விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி குயின்ரஸ் நிமால் வாகினி,யாழ் ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் 24 25 ஆம் திகதிகளில் அண்ணாவின் விடுதலைக்காக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா அருகில் போராட்டமொன்றை மேற்கொள்ள எல்லோரும் ஒருமித்த குரலாக கேட்டு இருக்கின்றோம். இதுவரையில் நாங்கள் அவ்வாறு கேட்டதில்லை.
எனது அண்ணா 30 வருடங்களுக்கு மேலாக சிறைக்குள் இருக்கின்றார். இதனை பார்க்கின்ற அனைவரும் எமக்காக குரல் கொடுக்க வேண்டும் .எமது அண்ணா வெளியில் வரவேண்டும். பொது அமைப்புகள் தனி நபர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். முப்பது வருடங்களுக்குப் பிறகும் அவர் சிறைக்கு உள்ளே இருப்பதில் நியாயம் இல்லை. எனது அண்ணாவிற்காக எல்லோரும் வந்து குரல் கொடுக்க வேண்டும்.
விடுவிக்கப்படுவார்கள், விடுவிக்கப்படுவார்கள் என நம்பி நம்பி நாங்கள் ஏமாந்து போனோம். இந்த முறையாவது எனது அண்ணாவை விடுவிக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்து எமது அண்ணாவின் விடுதலைக்காக குரல் தர வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்திடம் நாங்கள் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். ஒருவர் கூட ஒரு பதிலையும் தரவில்லை. கடிதம் கிடைத்திருக்கின்றது என்று சொல்வார்களே தவிர அண்ணாவை விடுவிப்பது தொட்பான கேள்விக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை.
கடைசியாக வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கூட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என சொல்லியிருந்தார். ஆனால் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.
![]()