பெருமளவு சிறுவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாமென அச்சம்; செம்மணியில் இருப்பது சிறுவர்களின் புதைகுழியா ?

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பெருமளவு சிறுவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் வெள்ளிக் கிழமை அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாக காணப்படுகின்றன.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சனும் இது தொடர்பிலான அச்சத்தை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.அகழ்வுப் பணிகள் இரண்டு பிரிவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சந்தேகத்துக்கிடமான பகுதியிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது.
இதுவரை மொத்தமாக 42 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 37 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன .
வியாழக்கிழமைக்கு பின்னர்(வெள்ளி) அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாக காணப்படுகின்றன.
சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு புதிதாக அகழப்படும் பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
அதேவேளை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சங்கத்தினர் வெள்ளிக்கிழமை அகழ்வுப் பணியை பார்வையிட்டனர் என்றார்.
![]()