உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து ஒடுக்கு முறைகளின் மூலம் ஆட்சியை தொடர முயற்சி

மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து ஒடுக்கு முறைகளின் மூலம் ஆட்சியமைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைத்து ஒடுக்குமுறைகளின் மூலம் அரசாட்சியை செய்ய முயற்சிக்கின்றது. முதலில் ராஜபக்ஷக்கள் திருடர்கள் என்று கூறினர். பின்னர் 225 பேரும் திருடர்கள் என்றனர். அதன்பின்னர் சகல அரச அதிகாரிகளும் திருடர்கள் என்று கூறியதுடன் தற்போது வைத்தியர்களையும் திருடர்கள் என்று கூறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினரை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் என்பதுடன், இறுதியில் தமக்கு வாக்களித்த மக்களை ஒடுக்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்படும்.
எவ்வாறாயினும் நாட்டு மக்களை ஒடுக்கி மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் கட்சியென்ற வகையில் அணி திரள்வது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.
இப்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அது தொடர்பில் கதைப்பது இனவாதத்தை தூண்டுவதை போன்று கூறுகின்றனர். இளைஞர்களிடையே அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் காணாதது போன்று இருக்கின்றது. இதனையும் ராஜபக்ஷக்கள் மீது சுமத்தி தமது கைகளை கழுவிக்கொள்ளும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்கின்றது.
இதேவேளை மனித உரிமைகள் தலைவரையே நாட்டுக்கு கொண்டு வருகின்றனர். அவரை கொண்டு வந்து பழைய குழிகளை தோண்டுவது தொடர்பிலேயே கதைக்கின்றனர். ஆனால் நாட்டு மக்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாத அரசாங்கமாக இது மாறியுள்ளது.
எங்களை அச்சுறுத்தியோ, சிறையில் அடைப்போம் என்று கூறியோ எதிர்க்கட்சிகளினதும், எங்களினதும் வாய்களை மூட முயற்சிக்கக்கூடாது. அவ்வாறு எங்களின் வாய்களை மூட முடியாது. தவறை சுட்டிக்காட்டும் போது எங்களின் வாய்களை மூட முயற்சிக்காது தவறுகளை திருத்திக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
![]()