கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 13….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இந்த யுகம் முடிந்ததும் அடுத்த யுகமான திரேதா யுகம். இப்போது மாடசாமி அண்ணாச்சி நீங்கள் சுதாரித்துக் கொண்டாலே போதும். அந்த சூழலில் இருந்து மீண்டிருப்பீர்கள். தலைக்குமேல் போனபின் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற பக்குவத்தை அடைந்திருப்பீரகள்.

திரேதா யுகம் பன்னிரண்டு லட்சத்து தொன்னூற்று இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கும். இந்த யுகத்தில் மனிதனின் ஆயுள் பத்தாயிரம் ஆண்டுகளே. மனிதர்கள் எட்டு அடி உயரத்தில் இருப்பார்கள். ராமர் பிறந்ததே திரேதா யுகத்தில்தான். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லுங்கள். அப்பேர்ப் பட்ட ராமனுக்கே திரேதா யுகத்தில்தான் பிறக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்படியிருக்க நாம் எம்மாத்திரம்? நமக்கெல்லாம் கிருத யுகத்தில் பிறக்கும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்காது. ஏனென்றால் இந்த கலியுகத்தில்தான் பெரிய பெரிய ஆச்சாரிகளும் மகான்களும் சுவாமிகளும் மடாதிபதிகளும் தோன்றியிருக்கிறார்கள்.

சிருங்கேரி சுவாமிகளாகட்டும் குன்றக்குடி அடிகளாகட்டும் காமகோடி பீடாதிபதிகளாகட்டும் வச்சான் பாரு ஆப்பு எனக்கு என்று கூறும் நித்யானந்த சுவாமிகளும் பாகுபாடின்றி இந்த கலியுகத்தில் அவதரித்த பெருமக்களே. நம் போன்றவர்களுக்கு கிடைத்த பெருமை இத்தகைய மகான்கள் தோன்றிய கலியுகத்தில்தான் நாம் தோன்றியுள்ளோம் என்பதே.

எப்படிப் பட்ட மகான்களெல்லாம் கலியுகத்தில் தோன்றி அதன் பலனை அனுபவித்து இருக்கும்போது நமக்கு அனுபவிப்பதில் என்ன நேர்ந்து விடப்போகிறது.

image.jpeg

அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகம் எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம் ஆண்டுகள் நீடிக்கும். ஆயிரம் ஆண்டுகள் வாழலாம். மனிதர்கள் ஏழு அடி உயரத்தில் இருப்பார்கள். கிருஷ்ணர் பலராமர் எல்லாம் இந்த யுகத்தில் பிறந்தவர்கள். இராமரை விட கிருஷ்ணர் ஒரு அடி குறைவுதான். ஆயுளும் குறைவுதான். கடவுள்களுக்குள்ளேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும்போது நமெல்லாம் எதைப்பற்றியும் கவலைப் படக்கூடாது.

கடைசியாக நாம் வாழும் கலியுகம். மனிதர்கள் ஆறடி உயரம் இருப்பார்கள். 120 ஆண்டுகள் வாழ்வார்கள். உடனே மாடசாமி அண்ணாச்சி இந்த யுகங்களில் நடப்பதாக சொல்லப்படுவதெல்லாம் உண்மை என்றால் நான் ஐந்தரை அடிதானே இருக்கிறேன் என்று விவாதம் செய்கிறார். அதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நம் முன்னோர்கள் எழுதிவைத்ததை படித்துத்தான் சொல்கிறேன்.

நான் இல்லாததைச் சொல்லவில்லை. நம் முன்னோர்கள் பொய்யா சொல்வார்கள். இன்னொன்றையும் சொல்லி கடுப்பேற்றுகிறார் அவரது அப்பா அறுபது வயதிலேயே மேலே சென்றுவிட்டாரம். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரிந்து கொள்ளமுடியவில்லை.

ஆனால் மகான்கள் அவதரித்த கலியுகத்தில் கல்கி பகவான் அவதரிக்கப் போகும் இந்த யுகத்தில் நானும் அவதரித்துள்ளேன் என்பதை எண்ணும்போது இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் என்ற வள்ளுவனின் அருள்வாக்கு நெஞ்சில்மோதி இதமளிக்கிறது.

யாமறிந்த செய்தியினை சொல்வதிலே என்பதால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இப்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம். வராக அவதாரம் கேள்விப் பட்டிருக்கிறோம் அது என்ன வராக கல்பம்? காயகல்பம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம் அது என்ன வராக கல்பம்? என்று தோன்றவே மேலும் படித்தேன்.

படித்ததை பகிர்வதுதானே ஞானம். நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். பன்னிரெண்டு மகாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்தரம். பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக முப்பது கல்பங்கள் உள்ளன.
இந்தக் கணக்குகளெல்லாம் கடவுளரின் கணக்கு. கடவுளரே பெரியவர்களாயிருக்கும் பட்சத்தில் கால அளவுகளும் பெரிதுதானே.

image.jpeg

இருபத்திநான்கு மணி நேரம் ஒருநாள். ஏழு நாட்கள் ஒரு வாரம். நான்கு வாரம் ஒருமாதம். பன்னிரெண்டு மாதங்கள் ஒரு ஆண்டு. பன்னிரெண்டு ஆண்டுகள் மாமாங்கம். அறுபது ஆண்டுகள் ஆண்டுவட்டம் என்ற கணக்குகள் ஒரு தனி ஆவர்த்தனம் வேறு ஓடுகிறது. இதில் கடவுள் சொல்வது சரியா? நாம் பின்பற்றுவது சரியா? தலை சுற்றுவதால் இத்தோடு இதைவிட்டு படியளக்கும் பகவானாடம் வருவோம்.

படியளக்கும் பகவான் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயரை எழுதி வைத்திருப்பவன் சைட் டிஷ் இல்லாமல் தவிக்கவிடுவானா? அதனால் சைவ உணவு அசைவ உணவு என்று பேதம் பார்க்காமல் நாம் சாப்பிடும் ஒவ்வொரு முருங்கைக்காயிலும் புடலங்காயிலும் மட்டுமின்றி எல்லா மரக்கறிகளிலும் பெயரை எழுதி வைத்திருப்பான். இதுபோல அசைவ உணவு எல்லாவற்றிலும் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கலாம்.

ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதி வைத்திருப்பதை சொன்ன மகான்கள் இவற்றை சொல்லாது விட்டிருக்கலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஆறாம் அறிவைக் கொடுத்திருப்பது இதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்.

இப்போது மாடசாமி அண்ணாச்சி குறுக்குடுகிறார். அவர் எனக்கு பக்கபலமாக இருப்பதால் அவரின் உதவியும் எனக்கு தேவைப்படுகிறது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம் என்று கேட்டேன். அவர் கேட்ட கேள்வி என்னை தூக்கிவாரிப் போட்டது.

அவர் கேட்ட கேள்வி, எல்லாம் தலை எழுத்து என்று சொல்கிறார்களே அது வேறு இது வேறா? இந்த தலை எழுத்து என்பது நாம் உண்ணும் அசைவ உணவுகளின் உயிர்களுக்கும் பொருந்தும் அல்லவா? அவைகளுக்கும் தலை எழுத்து இருப்பதால்தான் இந்த உயிரினங்கள் இவர்களுக்கு என்று உணவு ஆகிறது.

ஒவ்வொரு அரிசியலும் நம் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். காரணத்தைக் கூறுகிறேன். நான் பிறந்த கீழப்பாவூரில் இருந்தபோது சிறுமணி, கார்த்திகைச் சம்பா, யானைக் கொம்பன் என்று சுற்று வட்டாரத்தில் விளைந்த அரிசியில் தான் என் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *