பெரும் அதிர்ச்சியைத் தரும் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டத் தோண்ட வருவது சிறுவரின் எலும்புக் கூடுகளே!

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது எனத் தெரியவந்ததையடுத்து செம்மணியில் நேற்று வியாழக்கிழமை வரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் 10 ற்கும் மேற்பட்டவை (12வரை) சிறுவர்களின் எலும்புக்கூடுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றைய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் இன்று(நேற்று) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான நான்கு பேர் அடங்கிய குழுவும் வைத்தியர் செல்லையா பிரணவன் தலைமையிலான இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகளும் தடயவியல் பொலிஸார் நான்கு பேரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் 8 பேரும் நல்லூர்
பிரதேச சபையின் ஊழியர்கள் ஏழு பேர் இணைந்து அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.
நல்லூர் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் போன்றோர் ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுவரை 34 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவை நீதிமன்ற கட்டுக்காவல் மூலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறையின் மானுடவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அகழ்வாய்வின்போது எடுக்கப்பட்ட பை, விளையாட்டு பொம்மை, வளையல்கள் போன்ற சான்றுப் பொருட்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
34 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள. அதே நேரத்தில் இரண்டு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதோடு நான்கு மண்டையோடுகள் தெரிகின்றன. அதில் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதுவரை மொத்தமாக 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு பேருடைய மண்டையோட்டுகள் இன்னமும் துப்பரவாக அடையாளப்படுத்தப்படாமல் இருக்கிறது.
கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு யாழ்ப்பாண பொலிசார் 24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.காணாமல் போனவர்கள் அலுவலக சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட சார்பில் நாங்களும் இங்கு பிரசன்னமாகி இருக்கின்றோம்.
ஏற்கனவே செய்மதியில் காட்டப்பட்ட சந்தேகத்துக்கிடமான பிரதேசத்தில் நேற்று வியாழன் முதல் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று(நேற்று) அதில் ஒரு ஆடையை ஒத்த சந்தேகத்திற்குரிய துணியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது அகழப்படவில்லை. அது அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவை தொடர்பான மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்.
தற்போது அகழ்வுப் பணிகள் மாத்திரமே நடைபெறுகிறது. எந்தப் பொருட்களையும் ஆய்வு செய்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. முழுவதுமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட பிற்பாடு மண்டையோட்டு தொகுதிகள் உள்ள மனித எலும்புகள் சட்ட வைத்திய அதிகாரி குழுவினரிடம் ஆய்வு செய்யப்படும்.
இதன்போது ஆணா பெண்ணா, வயது, இறப்புக்கான காரணங்கள் என்பன சொல்லப்படும்.
ஏனைய பிற பொருட்களை வைத்துக்கொண்டு அதற்கான கால அளவை பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர் சொல்வார்கள்.தற்போது அகழ்வு பணிகள் நடைபெறுகிறது. அதன் பின்னரே ஏனைய விபரங்கள் தெரியவரும் – என்றார்.
![]()