குழப்ப நிலையில் அரசின் செயல்கள் கோதாபயவின் நிலையே அநுரவுக்கும்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான முறையான திட்டமிடல்கள் மற்றும் அமைச்சர்களிடையே ஒருமித்த நிலைப்பாடுகள் இன்றி இந்த அரசாங்கம் பயணிக்குமாக இருந்தால் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலைமையே அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அஜித் பி பெரேரா இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் நாட்டின் நாளாந்த விடயங்கள் தொடர்பில் எந்தளவுக்கு புரியாமல் இருக்கின்றனர். அதேபோன்று அரசாங்கத்தின் தலைவர்கள் முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர். அத்துடன் பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் கூறுகின்றனர் என்றும் தெரிகின்றது.
அதாவது ஏதேனும் விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் ஒரு கருத்தையும், பிரதி அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான மகிந்த ஜயசிங்க வேறு விதமான கருத்தையும் கூறுகின்றார். இதன்படி அரசாங்கத்திற்குள்ளும் ஒரு நிலைப்பாடு இல்லை. இவ்வாறு நாட்டை கொண்டு சென்றால் நாடு இருந்த இடத்தில் இருந்து பாதாளத்திலேயே விழும். இதனையே கோதாபயவும் செய்தார். அவர் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்று தப்பிச் சென்றார். அநுரகுமாரவுக்கும் இவ்வாறு ஆட்சி செய்தால் அதே நிலைமையே ஏற்படும்.
அரசாங்கம் என்ற ஒரே கொள்கை, ஒரே வேலைத்திட்டம், ஒரே குரலில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதுடன், நாட்டை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் திட்டமிடல்கள் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. நாங்கள் கொள்கை அடிப்படையில் வேலை செய்வோம் என்றும், முதல் நாளில் இருந்து பணியை ஆரம்பிப்போம் என்று கூறினாலும் ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்துள்ள போதும் அதனை செய்யவில்லை. குறிப்பாக வலுச் சக்தி துறையில் நாட்டை பின்னோக்கியே கொண்டு செல்கின்றனர். இன்னும் நான்கு வருடங்கள் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது. முறையான திட்டங்களுடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை இந்த அரசாங்கத்தினால் புதிதாக விசாரணைகளை நடத்தி இருப்பதாக கூறப்படும் பைல்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரையாவது கைது செய்துள்ளதா? எவ்வாறாயினும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தினமும் கைதுகள் நடக்கின்றன. கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டமையானது ரணில் அரசாங்கத்தில் நடந்த விசாரணைகளை அடிப்படையாகக்கொண்டதே ஆகும். அதேபோன்று மகிந்தானந்த அளுத்கமகே சிறைக்கு சென்றமையானது நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு வழக்குகளை அடிப்படையாகக்கொண்டதே ஆகும். இதனால் வாய்ப் பேச்சுகள் மூலம் இலஞ்ச ஊழலை இல்லாமல் செய்ய முடியாது. இதற்கு தேவையான திட்டமிடல்கள் அவசியமாகும் என்றார்.
![]()