அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் இலங்கை தப்புமா?; 9ஆம் திகதி தெரியவரும்

இலங்கைக்கு பாதிப்பு இல்லாதவாறு அமெரிக்காவின் புதிய தீர்வை வரித் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஜுலை 9ஆம் திகதியளவில் அது தொடர்பில் அறிவிக்க முடியுமாக இருக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய தீர்வை வரித்திட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைமச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் புதிய தீர்வை வரித்திட்டத்தால் உலக நாடுகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எமது 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி எமது அரசாங்கம் நாட்டுக்கு நன்மையளிக்கக் கூடியவாறும், நாட்டுக்கு பாதிப்பை குறைக்கும் வகையிலும் நிதி அமைச்சின் தலையீட்டில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. அமெரிக்காவின் வணிக திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இதன்படி ஜுலை 9ஆம் திகதியளவில் எமது நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும், எமது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவான பாதிப்பு இல்லாதவாறு தீர்வை வரி திட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியுமாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஊடாக அதனை எதிர்பார்க்கின்றோம். 90 நாட்கள் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா தரப்பில் வழங்கப்படும் பதில் மூலம் அதனை அறிவிக்க முடியுமாக இருக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.
![]()