இலங்கை

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை மிக முக்கியமானதாயிருக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகையின் போது, இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை மிகவும் முக்கியமானதாக இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தனது இலங்கை விஜயத்தை முடித்து திரும்பியுள்ள போதும், அவரின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் இலங்கையில் இடம்பெற்றிருந்தது.

பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்த போது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது இந்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என்று அரசாங்கப் பிரதிநிதிகள் நாட்டிற்கு உறுதியளித்திருந்தாலும், இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாகவும் வெளிப்படுத்தப்பட்டது. அந்த நிபந்தனைகளை செயல்படுத்துவதில் மக்களின் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருந்தும் கூட அதில் கவனம் செலுத்தாததால் மக்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அமைதியான போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மனித உரிமை மீறல்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் நடத்த அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்,மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் பெரிய சுவரொட்டிகள் மற்றும் பலகைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். செம்மணிப் புதைகுழிக்கு அருகில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் பல நாட்கள் தொடர்ச்சியான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் செம்மணிப் புதைக்குழிக்கு அருகே இடம்பெற்ற பதற்ற நிலைமைகள் போன்றன இலங்கை அரசாங்கத்துக்கு தற்போது சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கை, மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *