இலங்கை

தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றுதாக குறிப்பிடுவது முறையற்றது. நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு,சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இரத்துச் செய்வதற்கு வெளிப்படையான தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு பாரியதொரு பின்னடைவை எதிர்க்கொண்டுள்ளது.இவ்வாறான பின்னணியின் மாகாண சபைத் தேர்தலை இந்த அரசாங்கம் விரைவாக நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தியது. மாகாண சபை முறைமைக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது. பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாகாண சபை முறைமை குறித்து தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *