இலங்கை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ராணுவத்தினரால் மீண்டும் (28) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட ஆலயத்திற்குள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் கடந்த 6 மாத காலத்திற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக (26) முதல் மக்கள் சென்று வழிபடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கடந்த வருடத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலயத்தினை சுத்தம் செய்துள்ளனர்.

பின்னர் இராணுவத்தின் வாகனத்தினூடாக கோவில் நிர்வாகத்தினரை மாத்திரம் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த பாதையினை விடுவித்து மக்கள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டு, வந்தனர்.

இந்த நிலையில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயத்திற்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால் வழிபட முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதை மூடப்பட்டு முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

இதன்போது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்த வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன், செயலாளர், ஆலயத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகைதந்திருந்த நிலையில் திரும்பிச் சென்றுள்ளனர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *