தமிழ்க் கட்சிகளின் பிச்சல்பிடுங்கல்கள் எதனைக் காட்டுகின்றன?… நியூசிலாந்து சிற்சபேசன்

மழைவிட்டும் தூவானம் ஓயவில்லை என்பதுபோல், உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னரும், அரசியல்வாதிகளின் பிச்சல்பிடுங்கல் ஓயவில்லை.
இலங்கையிலே விகிதாசாரத் தேர்தல் முறை காணப்படுகின்றது.
ஒரு சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவகையில், ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே, விகிதாசார தேர்தல் முறையின் உள்ளார்ந்த நோக்கமாகும்.
வெளிப்படையாகச் சொல்வதெனில், வாக்காளர்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் ஏதோவொரு வகையில் கூட்டுச் சேரவேண்டும். அவ்வாறானதொரு கூட்டு மூலமாகவே ஆட்சியொன்றை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையே, விகிதாசாரத் தேர்தல் முறை, ஏற்படுத்துகின்றது. தனியொரு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் எளிதில் அமைந்துவிடுவதில்லை.

நியூசிலாந்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அங்கே கலப்பு அங்கத்துவ விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையே காணப்படுகின்றது.
நியூசிலாந்து அரசியல் சித்தாந்த ரீதியிலே கட்டமைக்கப்பட்டதாகும்.
முதலாளித்துவ சிந்தனை சார்ந்த கட்சிகள், வலதுசார் தரப்பாக அடையாளப்படுகின்றன. உழைப்பாளிகளின் குரலாக, இடதுசார்தரப்பு அடையாளமாகின்றது.
இவ்வாறான சித்தாந்தரீதியான வேறுபாடுகளைக் கொண்ட கட்சிகள் கூட, விட்டுக்கொடுப்புடனேயே, நியூசிலாந்தில், ஆட்சி அமைக்கின்றன. கொள்கைத் திட்டங்களின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்படுகின்றது. அதிலே பெரிய கட்சி, சிறிய கட்சி என்பது பொருட்டல்ல மாறாக, பாராளுமன்றப் பிரதிநிதித்துவப் பலமே உந்து விசையாகின்றது.
விகிதாசாரத் தேர்தல்முறை இல்லாத நாடுகளிலேயும்கூட, பல்வேறு கட்சிகள் இணைந்தே ஆட்சி அமைக்கின்ற சூழல் காணப்படுகின்றது.
இந்தியாவின் மோடி அரசுகூட கூட்டணி அரசேயாகும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவுடனேயே மோடி அரசு கோலோச்சுகின்றது.
ஆக, கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டிய சூழல் சனநாயகப் பரப்பிலே புதுமையல்ல. அதற்கு இலங்கை விதிவிலக்காக முடியாது.
ஆனால், அத்தகையதொரு கூட்டு ஆட்சியை ஏற்படுத்துவது இலங்கையிலே எளிதானதல்ல. அதற்கு கட்சிகளிடையே காணப்படுகின்ற கொள்கை வறட்சியே முக்கிய காரணமாகும். அதனாலேயே, தனிநபர் முனைப்பும் இனவாதமும் கொடிகட்டிப் பறக்கின்றன.
தெற்கில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்க பிரிந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தமை கொள்கை அடிப்படையிலே ஏற்பட்டதல்ல.
வடக்கில், தமிழ் காங்கிரசிலிருந்து எஸ் ஜே வி செல்வநாயகம் பிரிந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தமை கொள்கை அடிப்படையிலே ஏற்பட்டதல்ல.
இரண்டுமே தனிநபர் முரண்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்பட்டவையாகும். அன்றையகாலத்திலேயே கொள்கைப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது. அதனாலேயே தனிநபர் போட்டி தலைதூக்கியது. போற்றுதலும், தூற்றுதலும் சர்வசாதரணமாகியது. மக்களை உணர்ச்சிவசப்படுத்த இனவாதம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இலங்கை அரசியலின் சாபக்கேடாகியது.
தனிநபர் முனைப்பிலே கட்சிகள் உடைகின்றன. புதிய கட்சிகள் உருவாகின்றன. அதிலே சிங்கள – தமிழ் வேறுபாடு கிடையாது.
இலட்சிய தாகத்துடன் புறப்பட்ட இளைஞர்களினாலுமே கூட, “தனிநபர் முனைப்பு” என்பதைக் கடந்து, கொள்கை அடிப்படையில் நிலைத்திருக்க முடியவில்லை என்பதே குரூரமான யதார்த்தமாகும்.
கொள்கையா?, அது கிலோ என்ன விலைக்கு கிடைக்கும்? என்றும் கேட்கும் சூழலிலேயே தேசியவாதமும், இனவாதமும் வளர்க்கப்பட்டன. “தியாகி” – “துரோகி” துருவநிலைகளே அரசியல் மந்திரமாகியது.
அதனாலேயே, இலங்கை அரசியல் மிகப்பெரிய சாக்கடையாகியிருக்கின்றது.
அதனுடைய பிரதிபலிப்பையே, ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் காணமுடிகின்றது.
தேசபரிபாலனம் என்னும் கோட்பாடே சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது.
தேர்தல் காலத்தில் மட்டுமின்றி, தேர்தல் முடிவடைந்த பின்னரும்கூட பிச்சல்பிடுங்கல் தொடர்கின்றது. அதுவே சமூக அமைதியையும் குலைக்கின்றது. கூடவே, இலங்கை அரசியலின் தராதரத்தையும் வெளிப்படுத்துகின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான நிர்வாகத்தை உருவாக்குவதிலே, அரசியல்கட்சிகளிடையே நடைபெறுகின்ற “திகில்” நடவடிக்கைகள், “சின்னத்திரை தொடருடைய” விறுவிறுப்பையே விஞ்சுகின்றன.
சமூக வலைத்தளங்களில் கட்சிவிசுவாசிகள் மோதிக்கொள்கின்றனர். அத்தகையமோதல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. சமூகவலைத் தளங்களில் களமாடுவதற்கான பணத்தை, அரசியல்பிரமுகர்களே, வாரியிறைப்பதான குற்றச்சாட்டுக்களும் உண்டு.
மேற்சொன்ன மோதல்கள் கொள்கை அடிப்படையானது அல்ல. மாறாக, தனிநபர் போற்றுதலும் தூற்றுதலுமேயாகும். தனிநபர்களுக்கு இடையேயான போட்டியேயாகும். அதற்கு செம்மணியும் சாட்சியாகிவிட்டது.
தேர்தல் வெற்றியை இலக்குவைப்பது மட்டுமே அரசியல் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அதனால் அரசியல்பரப்பு தொடர்ச்சியாகச் சேதமடைகின்றது.
குறிப்பாக, உள்ளூராட்சி சபைகளிலே தவிசாளர் / உபதவிசாளர் போன்ற பதவிகளைக் கைபற்றுவதற்காக, தமிழ்க்கட்சிகளிடையே நடைபெற்ற உரையாடல்கள், வாதப்பிரதிவாதங்கள், மோதல்கள் என்பவை அருவருப்பையே ஏற்படுத்துகின்றன. தமிழ் அரசியலில், ஆரோக்கியமான மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லையோ என்னும் கேள்வியை எழுப்புகின்றன.
சுமார் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட வலிகளை தமிழ் மக்கள் சுமந்து கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த பதினாறு ஆண்டுகளாக, நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணிவிடுவிப்பு என எந்தவொரு விடயத்திலுமே சொல்லிக்கொள்ளக்கூடிய மாற்றம் ஏற்படவில்லை.
இவைகுறித்த, ஆத்மார்த்தமான கரிசனைகொண்டோரை அரசியல்பரப்பில் காணமுடிவதில்லை.
கட்சி அரசியல் என்பதே அதிகாரத்துக்கானது என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால், அடிப்படை இருப்புக்கே போராடுகின்ற மக்கள்கூட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யவிரும்புகின்ற அரசியல்வாதிகளுக்கு வரலாற்றுப் பொறுப்பும் உண்டலவா.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ் கட்சிகளுக்கு மிகப்பெரிய தோல்வியையே தமிழ் வாக்காளர்கள் வழங்கினார்கள்.
அதிலிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் எதனையுமே கற்றுக் கொள்ளவில்லை.
அதனையே தமிழ்க் கட்சிகளின் பிச்சல்பிடுங்கல்கள் துகிலுரித்துக் காட்டுகின்றன.

![]()