மனித உரிமைகள் மீறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத் தரத்துடன் உள்நாட்டுப் பொறிமுறையை நிறுவ வேண்டும்; பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும், இதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குவதுடன் இது தொடர்பாக தொடர்ந்தும் அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கையில் மனித உரிமை மீறல் விடயங்களைக் கையாள்வதற்காக ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் இது சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை கடைபிடிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
மேலும் இந்த உள்நாட்டுப் பொறிமுறையானது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போக வேண்டும். அத்தகைய பொறிமுறையை நிறுவுவதில் இலங்கை சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும் என்றும் டேர்க் கூறியுள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள், நேற்று வியாழக்கிழமை இலங்கையில் இருந்து விடைபெற முன்னர் கொழும்பில் ஐநா அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கை பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டியுள்ளது. பல்வேறு உள்ளக பொறிமுறை விடயங்கள் உள்ளன. அவற்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் பொறுப்புக் கூறலே தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகின்றது. இதன்படி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். தொடர்ந்தும் பொறுப்புக் கூறலுக்கான அழுத்தங்களை நாங்கள் வழங்குவோம். அதேபோன்று மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் விடயங்களைக் கையாள்வதற்காக ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் இது சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை கடைபிடிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் இந்த உள்நாட்டுப் பொறிமுறையானது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போக வேண்டும். அத்தகைய பொறிமுறையை நிறுவுவதில் இலங்கை சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்
இதேவேளை , நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், அவற்றை இரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர்,பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
![]()