இலங்கை

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வௌியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இருப்பினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது விசாக்கள் காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலும் நேற்று ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் ஈரானில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது புதிய தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

கடந்த 13 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஐ எட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதல்களில் 2,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானிய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *