உலகம்

தள்ளாடும் வான் பாதுகாப்பு ! தடுமாறும் இஸ்ரேல்; நெருங்கும் பேரழிவு? ஈரானை சமாளிக்க முடியுமா! அமெரிக்கா அணுகுண்டுகள் வீசுமா?

இஸ்ரேல்கே ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயர்ன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கி வருகிறது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது .

 இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோமை எந்தவொரு ஏவுகணையாலும் முறியடிக்கவே முடியாது என்றே இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக ‘அயர்ன் டோம்’ (Iron Dome) இதுவரை இல்லாத வகையில் சோதிக்கப்பட்டது. மோதல் எட்டாவது நாளாக நீடிப்பதால், அதன் செயல்திறன் மற்றும் அது நீண்ட மோதலைத் தாக்குப்பிடிக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

வியாழக்கிழமை ஹைஃபா மற்றும் டெல் அவிவ் நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்தது மட்டுமின்றி, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

 இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி ஈரானின் ஏவுகணைகள் அந்த மருத்துவமனையைத் தாக்கியுள்ளது. மேலும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறிச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் தலைவரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் அமீர் அவிவி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “அயர்ன் டோம் அழுத்தத்தில் இருக்கிறது. அது உண்மை தான். ஆனால், அதன் செயல்திறனில் பெரிய பாதிப்பு இல்லை. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பில் அயர்ன் டோம் மட்டும் இல்லை. குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் ‘Arrow 3’ என்ற அமைப்பு மூலம் இடைமறிக்கப்படுகின்றன. செய்மதி  மூலம் இயங்கும் இது 90%க்கு மேல் துல்லியமானதாக இருக்கிறது.

நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு அமைப்பும் முழு பாதுகாப்பானதாக இருக்காது. 100% பாதுகாப்பை எட்டுவது கிட்டதட்ட முடியாத காரியம்.. ஒரு ஏவுகணை வந்தாலும் உடனடியாக இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு இயங்கும்.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குச் செல்ல வேண்டும்” என்றார்.

அயர்ன் டோம் முழு பாதுகாப்பைத் தருமா அல்லது அயர்ன் டோம் இல்லாத நிலைக்கு இஸ்ரேல் ரெடியாக வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவிவி, “இது இன்னும் நம்பகமான ஒன்றாகவே இருக்கிறது. மேலும், மீண்டும் சொல்கிறேன். இஸ்ரேலிடம் இந்த ஒரு பாதுகாப்பு அமைப்பு மட்டும் இல்லை. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதை அவர்களால் தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்கள் ஏற்கனவே ஈரானின் 40% ஏவுதளங்களை அழித்துவிட்டன. ஈரான் விழும் வரை இஸ்ரேல் சமாளித்தாலே போதும்” என்றார்.

                            அணுகுண்டுகள் வீசப்படுமா?

இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானின் அணுசக்தி நிலையத்தை முற்றிலுமாக அழிக்க ஒரு டசின் அணுகுண்டுகள் தேவைப்படும் என்று அமெரிக்க பென்டகன் வட்டாரங்கள் கூறுகின்றன. அதை பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா அஞ்சாது என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு வருகிறாராம். ஈரான் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *