இலங்கை

ராஜபக்‌ஷக்களின் ஆட்சி காலத்திலும் முறைகேடாக கைதிகள் விடுவிப்பு – உண்மை கண்டறியப்பட்டு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்

ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக வெகு விரைவில் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான வகையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி, பல கைதிகள் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சியில் இருக்கும் போது புனிதர்களைப் போன்று பேசுவதை நாமல் ராஜபக்‌ஷ எம்.பி தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபையில் உரையாற்றிய நாமல் ராஜபக்‌ஷ எம்.பி;

ஊடக கண்காட்சியை நடத்தும் பிரதான குழுவாக கோப் குழு காணப்படுகிறது.

அரச அதிகாரிகளை குழுவுக்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலையே காணப்படுகிறது.  ஆனால், குழுவின் அறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழல் எதிர்ப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வெறும் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே  இடம்பெற்றன.ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில்  சிறைச்சாலை அதிகாரி உட்பட சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், நீதியமைச்சின் செயலாளரிடம் இதுவரையில்  வாக்குமூலம் பெறவில்லை. அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பின் பலவீனத்தினால் தான் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழல் எதிர்ப்புக் குழுவின் செயலாளராக நான் பதவி வகித்தேன். எவருக்கும் அதன்போது சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே காலமாற்றத்தை தொடர்ந்து பொய்கூற முற்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அக்காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள்தான் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்போது பல வழக்குகள் மாற்றியமைக்கப்பட்டன. ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி தற்போது குறிப்பிடுகின்றார். இதுவொன்றும் புதிதல்ல. முறைகேடான  செயற்பாட்டினால் தான் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார். அதன்படி, பொதுமன்னிப்புக்கான பெயர்ப் பட்டியலை சிறைச்சாலை திணைக்களம் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கும். நீதியமைச்சின் பரிசீலனையின் பின்னர் அந்தப் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னரே ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்குவார். ஜனாதிபதி அனுமதித்த பெயர் பட்டியலில் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்ட கைதியின் பெயர் இருக்கவில்லை. முறைகேடு இடம்பெற்றுள்ளதால் தான் ஜனாதிபதி  செயலகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

ராஜபக் ஷக்களின் ஆட்சியில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் ஊடாக பல கைதிகள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொள்கிறது. அது தொடர்பான உண்மைகளை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவோம். எனினும், எதிர்க்கட்சிக்கு வந்த பின்னர் புனிதர்களை போன்று பேசுவதை நாமல் ராஜபக்ஷ தவிர்த்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *