உலகம்

‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’; அமெரிக்க தூதர் எச்சரிக்கை

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானும் இஸ்ரேலும் 7-வது நாளாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துருக்கிக்கான தூதராகவும் பணியாற்றும் சிரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தாமஸ் பராக், பெய்ரூட்டில் லெபனான் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது ஹிஸ்புல்லாவின் நெருங்கிய கூட்டாளியான லெபனானின் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரிடம் ஈரான் – இஸ்ரேல் மோதலில் ஹிஸ்புல்லா இணைந்தால் என்ன நடக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதனை அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்பாக நான் கூற முடியும். சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியது போல், இந்தப் போரில் ஹிஸ்புல்லா தலையிடுவது அவர்களுக்கு மோசமான முடிவாக இருக்கும்” என்று கூறினார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் தலைமைக்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஹிஸ்புல்லா கூறியது. ஆனால், ஹிஸ்புல்லா இந்தப் போரில் நேரடியாக தலையிடுவது குறித்து வெளிப்படையான அச்சுறுத்தல் எதையும் விடுக்கவில்லை.

கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரில் ஹிஸ்புல்லா மோசமாக பலவீனமடைந்தது. அதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும், ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா அமைப்பினரும் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *