உலகம்

இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மத்தியஸ்தம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.

ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இஸ்ரேல் தெஹ்ரானையும், ஈரான் டெல் அவிவ் நகரையும் குறிவைத்து குண்டுமழையை பொழிந்து வருகின்றன. இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த உத்தரவை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. அத்துடன், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் போர் விமானங்களை குவித்து வருகிறார்.

இந்த நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்கவும், ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டங்களை தொடர்வதற்கும் ஒரு தீர்வை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகத்தினர் மத்தியில் உரையாற்றிய அவர், ‘இது ஒரு நுட்பமான பிரச்சினை. ஒரு தீர்வை எட்ட முடியும்,’ என்று குறிப்பிட்டார்.

அப்போது, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் கொலை செய்து விட்டால், ரஷ்யாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ அத்தகைய சாத்தியக்கூறு பற்றி நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை,’ எனக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *