பிள்ளையார் சிலையை அகற்ற முயன்ற பிக்குவை தடுத்தவர் கைது; நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை

மூதூர் பகுதியில் ஒருவரின் காணியில் இராணுவத்தினரால் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அருகில் கடந்த 4 வருடங்களுக்கு முன்,காணி உரிமையாளரால் வைக்கப்பட்டு வழிபட்டு வந்த பிள்ளையார் சிலையை அகற்ற
முயன்ற பிக்குவை தடுத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மூதூர் நீதான் நீதிமன்றம் பிணையில் விடுத்துள்ளது.
இது பற்றித் தெரியவருவதாவது,
மூதூர் 3ம் கட்டை மலை விகாரதிபதி அ.ரமேஷ் என்பவருக்கெதிராக மூதூர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
இதன் போது சட்டத்தரணி துஷ்யந்தன் நீதிமன்றில் முன் வைத்த வாதத்தில்,
கைது செய்யப்பட்ட ரமேஷ் என்பவரின் காணிக்கு, அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 காலப் பகுதியில் ஆயுத படையினர் அதில் முகாம் அமைத்து அங்கு சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர்.
பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது, பிறகு வந்து அச் சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர் . ஆனால் இன்றுவரை அந்தச் சிறிய புத்தர் சிலை அங்கிருந்து எடுக்கப்படாததால், தனது அந்தக் காணியில் ரமேஷ், புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலையையும் வைத்து கடந்த 4 வருடங்களாக வழிபட்டு வருகிறார்.
கடந்த பொசன் காலத்தில் மூதூர் 3ம் கட்டை மலை விகாராதிபதி அங்கு வந்து, பிள்ளையார் சிலையை அந்த இடத்திலிருந்து அகற்ற முயன்றார்.இதனை தடுத்து விகாராதிபதியின் செயலை ரமேஷ் எதிர்த்ததால், விகாரதிபதியின் முறைப்பாட்டின்படி அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிருத்தியுள்ளனர். இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்பதுடன் இன முறுகலையும் ஏற்படுத்தும் செயலாகும். எனவே கட்சிக்காரரை விடுவிக்குமாறு மன்றை கோரினார்.
இதையடுத்து நீதவான்,ரமேஷுக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாரையும் அறிவுறுத்தினார்.
![]()