இலங்கை

ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து அவதூறு!; சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

அண்மையில் ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறித்து தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தனது ஜெர்மனி விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த அவிறிப்பு பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியாகியிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சங்கடப்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *