இலங்கை

எதிர்க்கட்சி தலைவருக்கு சஜித் தகுதியற்றவர்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு சிலரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு உண்டு. அவ்வாறு அவர் செயற்பட முடியாதுவிட்டால் அவர் எதிர்க்கட்சி தலைவ பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற அமர்வின் போது எதிர்கட்சித்தலைவரின் மேலதிக கேள்விக்கு சபாநாயகரினால் அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் இருந்து வெளி நடப்பு செய்தனர் இதன்போது எழுந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வர் மேலும் பேசுகையில்,

பாராளுமன்றத்தில் சண்டித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது. பாராளுமன்றத்தின் கௌரவம்,கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மிளகாய் தூள் தாக்குதல் நடத்த இடமளிக்க முடியாது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு சிலரின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் மற்றும் நடத்தைகள் வெறுக்கத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அவர் கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்த முடியாதுவிடின் அவர் எதிர்க்கட்சி தலைவ பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வைத்துக் கொள்வோம். பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒழுக்கமான முறையில் நடத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *