இலங்கை

வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்கள் ஆள வேண்டும்! – சாணக்கியன் எம்.பி.

எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்கள் ஆள வேண்டும். இதற்கு ஏறாவூர் நகர சபைத் தெரிவு சிறந்த எடுத்துக்காட்டு என இலங்கைத் தமிரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கு ஏறாவூர் நகர சபையிலே நடந்த தெரிவு வரலாற்றிலே முக்கியமானதாக நான் பார்க்கின்றேன்.

இது தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன நல்லிணக்தைப் பறைசாற்றுகின்றது. இத்தகைய ஒரு நிலைமையை அடைந்து கொள்வதற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தமிழ் பேசும் மக்கள் ஆள வேண்டும் என நாங்கள் அறிவுறுகின்றோம்.

ஏறாவூர் நகர சபைக்கு தவிசாளர் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட அமர்வில் பார்வையாளராகக் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளுரதிகார சபைத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களிலிருந்து ஏறாவூர் நகர சபைக்கு தவிசாளரையும் பிரதித் தவிசாளரையும் தெரிவு செய்யும் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இன்று ஏறாவூர் நகர சபை பொது அரங்கில் நடைபெற்றது.

அவ்வேளையில் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபைக்குத்; தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மதுசாலி நழிம் ஒன்பது பேரின் ஆதரவால் நகர சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதித் தவிசாளராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஏறாவூர் நகர சபைக்கு ஒரு தமிழர் பிரதித் தவசாளராக தெரிவு செய்யப்படுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது முழுமையான ஆதரவை வழங்கி தமிழ் முஸ்லிம் சமூக ஐக்கியத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

இதிலே முக்கியமான ஒரு விடயம் பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரல்ல அவர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அவர் தமிழர் என்ற வகையில் அவருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாங்கள் நிபந்தனையற்ற அதரவை வழங்கியிருந்தோம்.

ஆனால், முஸ்லிம்கள் ஒரு தமிழரை பிரதித் தவிசாளராக முன்னிறுத்தியபொழுது பிள்ளையானுடைய இரண்டு உறுப்பினர்கள் ஏறாவூர் நகர சபைக்கு பிரதித் தவிசாளராக ஒரு தமிழர் வருவதை எதிர்த்து வாக்களித்திருந்தார்கள் என்பதை மட்டக்களப்பு தமிழ் சமூகம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதேவேளை, நாங்கள் முஸ்லிம்களோடு இணக்கப்பாட்டுடன் நடந்து கொள்வதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாங்கள் முஸ்லிம்களோடு இணக்கப்பாட்டைக் காட்டுவதாக விமர்சிக்கும் இதே கட்சிக்காரர்கள்தான் கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாழைச்சேனை ஆரையம்பதி போன்ற பிரதேச சபைளில் முஸ்லிம்களின் ஆதரைவப் பெற்றுத்தான் ஆட்சியமைத்தார்கள்.

மூதூர், அங்கே தமிழர் ஒருவர் தவிசாளராக வருவதற்கு வாய்ப்பே இல்லாத 60 சதவீதம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடம். ஆனால், அப்படியிருந்தும் அங்கே தமிழர் ஒருவருக்கு முஸ்லிம்கள் தவிசாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோன்று யாழ் மாநகர சபையிலே ஒரு முஸ்லிம் சகோதரி ஒருவரை நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்மொழிந்திருக்கிறோம்.

எனவே எதிர்வரும் காலங்களிலே வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தமிழ் பேசும் மக்கள் ஆள வேண்டும் என நாங்கள் அவாவுற்று அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி பிள்ளையானோடு சேர்ந்துள்ளதால் ஊழலைப் பற்றிப் பேச இனி அவர்களுக்கு அருகதையில்லை. என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *