இலங்கை

திலீபனின் தியாகத்தை அற்ப பதவிகளுக்காக கொச்சைப் படுத்தாதீர்கள்; சபா.குகதாஸ் ஆதங்கம்..!

தியாக தீபம் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் முன்பாக வழிபாடு செய்வது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாக தீபம் திலீபன் சிங்கள பேரினவாத ஒற்றையாட்சியை நிராகரித்து தனி நாட்டை கோரிய விடுதலைப் போராட்ட தியாக வரலாற்றை கொச்சைப்படுத்தும் வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் சத்தியபிரமாணம் செய்து எடுக்கும் பதவியை பெற்றுவதற்கு திலீபனின் உருவப் படத்திற்கு முன்னால் அஞ்சலி செய்வது மிகப் பெரும் ஏமாற்றுடன் இளைய தலைமுறைக்கு வரலாற்றை பிழையான வழியில் சித்தரிப்பதுமாக அமையும் இப்படியான போலிச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் போராட்டம் மற்றும் உலகமே வியந்து பார்த்த திலீபனின் அகிம்சைப் போராட்டம் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தியது அது தனி நாட்டுக் கோரிக்கைக்கானது .

திலீபனின் உண்ணா விரத வரலாற்றை கொண்டாடுவது அல்லது நினைவேந்துவது விடுதலைப் போராட்ட வரலாற்று தினங்களில் வழிபடுவது அல்லது சாதாரண தினங்களில் நினைவேந்துவது சிறப்பானது. எதிர்கால சந்ததியும் தியாகத்தின் உண்மையை புரிந்து கொள்வார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இலட்சியம் “தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்” அவ்வாறான நிலையில் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் முன்பாக வழிபாடு செய்வது தியாக தீபம் திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *