இஸ்ரேலின் ‘ஒபரேஷன் ரைசிங் லயன்’ அதிகாலையில் அதிர்ந்தது ஈரான் அணு ஆயுதத் தளங்கள் அழிப்பு

ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய பாரிய திடீர் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்,மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், ஈரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும்(இராணுவத் தளபதி) உதவித் தலைவரும்(பதில் இராணுவத் தளபதி)கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ள அதேவேளை,ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசியும் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் அதேவேளை, ஹமாஸிற்கு ஆதரவாகவும் ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கும் நிலையில்,ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் இராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதல்களில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்ட அதேவேளை, ஈரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், ஈரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ள அதேவேளை,ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசியும் கொல்லப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் இஸ்ரேல் 200க்கும் மேற்பட்ட போர் விமானங்களை பயன்படுத்தி ஈரானின் 100க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியிருப்பதுடன், பல்வேறு வகையான 330 வெடிபொருட்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எழுச்சி பெறும் சிங்கம் இராணுவ நடவடிக்கையின் மூலம் (ஒப்பரேசன் ரைசிங் லயன்) இஸ்ரேல் ஈரானின் நட்டான்ஸ் அணு உலையை இலக்கு வைத்தது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் போது அணு விஞ்ஞானிகளும் இலக்கு வைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அவர், ஈரானின் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை திட்டத்தின் மையமாக இந்த அணு உலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதல் குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ள
ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி, ‘இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் மிகவும் இரக்கமுள்ள, மிகவும் கருணையுள்ள கடவுளின் பெயரால். சியோனிச ஆட்சியின் தீய மற்றும் இரத்தக்களரி கரம் இன்று விடியற்காலையில் நமது அன்புக்குரிய நாட்டில் ஒரு குற்றத்தைச் செய்தது. குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து அதன் தீய தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சி கடுமையான தண்டனைக்காகக் காத்திருக்க வேண்டும். கடவுளின் விருப்பத்தால் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த கை அதைத் தண்டிக்காமல் விடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ள நிலையில் இவற்றை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆளில்லா விமானங்களை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானின் 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஈராக்கின் வான்வெளியை கடந்து சென்றதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் எல்லையில் உள்ள ஈராக்கின் டியலா மாகாணத்தை சேர்ந்த மக்கள் ஈரானில் வெடிப்பு சத்தங்களையும் விமான சத்தங்களையும் கேட்டதாகவும் பின்னர் அங்கிருந்து ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி செல்வதை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜோர்தானின் விமானப்படையினர் தனது நாட்டின் எல்லைக்குள் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இடைமறித்து வருவதாக ஜோர்தான் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது அணுசக்தி திட்டம் தொடர்பில் இணக்கப்பாடொன்றிற்கு வரவேண்டும் அல்லது எதுவும் மிஞ்சாது என எச்சரித்துள்ளார்.
ஈரான் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால் படுகொலைகள் இடம்பெறும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பெருமளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த படுகொலைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இன்னமும் நேரம் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அடுத்த கட்ட தாக்குதல் இன்னமும் ஈவிரக்கமற்றதாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன செய்யலாம் என ஈரான் தரப்பில் முடிவெடுக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு என்ஐஏசி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இது அமெரிக்காவை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் எல்லை பகுதியில் அதிகளவிலான வீரர்களை அந்நாட்டு ராணுவம் குவித்து வருகிறது. ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவத் தலைவர் இயால் ஜமீர் கூறியுள்ளார். முன்னெப்போதும் காணாத வகையில் ஈரானின் தாக்குதல் இருக்கக் கூடும். இருப்பினும் அதை முறியடிக்க ராணுவம் முயற்சிக்கு என இஸ்ரேல் மக்களிடம் அவர் கூறியுள்ளார்.
![]()