இலங்கை

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை – ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 11,981 வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3,894 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 3,894 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழு 1 மற்றும் சுயேட்சைக்குழு 2 என்பன முறையே 1967, 1286, 809, 1174 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.

இந்நிலையில் அப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (12) நடாத்தப்பட்டது.

இதன்போது 6 ஆசனங்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் 2 ஆசனங்களைக்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஆசனத்தைப்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் வாக்களித்தார். அதன்விளைவாக அப்பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது.

இந்நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற ரீதியில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கினார் எனும் அடிப்படையிலேயே கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *