இலங்கை

தையிட்டி விகாரை விடயத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் அரசியல் லாபமடையும் நோக்கத்தில் செயற்படும் சிறிய குழுக்கள் இனவாதத்தை தூண்டி மக்களை அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ். திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றும், வடக்கு கிழக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்றும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கு இருந்தாலும் அந்த தொல்பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடே ஒன்றே. குறிப்பாக திஸ்ஸ விகாரை பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் அடிக்கடி கூறுவதானது, அந்த விகாரையின் பிக்குகளுக்கோ, அங்குள்ள மக்களுக்கேகா இது பிரச்சினை அல்ல. ஆனால் அரசியலில் லாப நோக்கத்துடன் இனவாதத்தை தூண்டி சிறிய அரசியல் குழுக்கள் மக்களை அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

எவ்வாறாயினும் நாட்டில் எங்கு இருந்தாலும் மத மற்றும் தொல்லியல் பெறுமதியான இடங்களை நாங்கள் பாதுகாப்போம் என்பதுடன், நாட்டில் சகல மக்களுக்கும் அந்த இடங்களுக்கு சென்று வழிபடுவதற்கான மற்றும் அங்கு சென்று வருவதற்கான சுதந்திரத்தையும் நாங்கள் பாதுகாப்போம்.

இதேவேளை எந்தவிதத்திலும் அடிப்படைவாத குழுக்களுக்கு அரசியல் லாபமடைவதற்காக இதனை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *